உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு.. நவ.12-ல் அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
சென்னை: உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த நவம்பர் 12 ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டமானது அன்று காலை 10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறுகிறது.
மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 103 ஆவது திருத்தம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மொத்தம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை வாசித்தது. அதில் 3 நீதிபதிகள் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றும் தலைமை நீதிபதி உள்பட இரு நீதிபதிகள் 10 சதவீத இடஒதுக்கீடு முறை செல்லாது என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

தீர்ப்பு
இந்த தீர்ப்பை பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்த்தன. அவை கூறுகையில் , "அனைத்து ஜாதிகளிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு உயர் வகுப்பில் உள்ள ஏழைகளுக்கு மட்டும் இந்த இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புக்கு எதிரானது.

33 சதவீதம்
உயர் வகுப்பினருக்கு ஏற்கெனவே 33 சதவீதம் இடஒதுக்கீடு இருக்கும் நிலையில் தற்போது பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு மேலும் 10 சதவீதம் வழங்கப்பட்டால் மற்ற ஜாதியினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வாய்ப்புகள் மறுக்கப்படும். இது இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராகிவிடும்" என தெரிவித்திருந்தனர்.

எம்பி வில்சன்
இந்த வழக்கில் வாதாடிய திமுக எம்பி வில்சன் கூறுகையில் இந்த தீர்ப்பை எந்த அடிப்படையில் 3 நீதிபதிகள் செல்லும் என அறிவித்தனர் என்பதை தீர்ப்பு நகலை வைத்துத்தான் சொல்ல முடியும். அடுத்த கட்ட நகர்வு குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

முதல்வருடன் வில்சன் ஆலோசனை
அந்த வகையில் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினுடன் வில்சன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், அமைச்சர் பொன்முடி, திமுக எம்பியும் வழக்கறிஞருமான வில்சன் ஆகியோருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

முதல்வர் பரபர ஆலோசனை
10 சதவீத இடஒதுக்கீட்டு முறை தீர்ப்பில் அடுத்த கட்டமாக செய்ய வேண்டியது குறித்து மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சில கருத்துகளை முன் வைத்துள்ளார். அது போல் இந்த வழக்கில் வாதாடிய வில்சனும் அவர் தரப்பு பாயிண்டுகளை கூறியுள்ளார். இந்த நிலையில் 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தவும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் நவம்பர் 12 ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் கூட்ட தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications