மிமிக்கிரி பண்ணிட்டாங்க.. எடப்பாடி பத்தி நான் அப்படி பேசுவேனா? பதறிப்போன பொன்னையன்.. பரபர விளக்கம்
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற எடப்பாடி பழனிச்சாமி பணம் கொடுத்ததாக பொன்னையன் பேசிய ஆடியோ நேற்று இணையம் முழுக்க வைரலானது. இந்த நிலையில், இந்த ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் பொன்னையன் பேசியதாக கூறப்படும் இந்த ஆடியோ நேற்று வெளியானது. அதில், பதிவியை காப்பாற்றிக்கொண்டால் போதும் என எடப்பாடி பழனிசாமி முட்டாள்தனமாக ஓடிக்கொண்டிருக்கிறார். யாரும் கட்சிக்கு விஸ்வாசமாக இல்லை என்று பொன்னையன் கூறுவதாக பதிவாகி உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. 9 எம்எல்ஏ க்களின் ஆதரவு மட்டுமே அவரிடம் உள்ளது, இதனால் எடப்பாடி கட்டுப்பாட்டில் கட்சி இல்லை என்று பொன்னையன் பேசுவதாக இந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது.

பொன்னையன்
இந்த நிலையில், இந்த ஆடியோ முழுக்க முழுக்க பொய்யானது என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் மறுப்பு தெரிவித்துள்ளார். பொன்னையன் அளித்துள்ள விளக்கத்தில், நான் பேசியதாக வெளியான ஆடியோ பொய்யானது. மிமிக்கிரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யாக ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். என் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆடியோ வெளியிட்டுள்ளனர்.

எடப்பாடி
எடப்பாடி தலைமையிலான அதிமுகவை முடக்க வேண்டும் என்று இப்படி செய்துள்ளனர். முழுக்க முழுக்க பொய்யான செய்தி இது. அதிமுகவில் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு பரப்புகிறார்கள். நான் கொங்கு நாட்டை சேர்ந்தவன். நான் குழந்தைகளை கூட வாங்க, போங்க என்றுதான் சொல்லுவேன். ஆனால் அந்த ஆடியோவில் நான் எடப்பாடி, வேலுமணி உள்ளிட்டவர்களை மரியாதை குறைவாக பேசியதாக பதிவாகி உள்ளது.

மறுப்பு
அப்படி பேசும் வழக்கம் கொண்டவன் நான் அல்ல. இதிலேயே அந்த ஆடியோ பொய்யானது என்பது தெளிவாகிறது. எனக்கு சிவி சண்முகம் , தங்கமணி, வேலுமணி மீது அதீத மரியாதை இருக்கிறது. அவர்கள் மீது அன்பு இருக்கிறது. அவர்களை பற்றி தவறாக பேச எனக்கு என்ன தேவை இருக்கிறது. எனக்கு என்ன உள்நோக்கம் இருக்கிறது. எங்கள் கண்ணை நாங்களே குத்திக்கொள்ளமுடியுமா?

ஆடியோ
வேலுமணியை ஏன் நான் சிறுமைப்படுத்த வேண்டும்? தங்கமணி கொங்கு மண்டலத்தில் சிறப்பாக செயல்படுகிறார். அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்த என்னை பயன்படுத்துகிறார்கள். ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள், சென்னையை சேர்ந்த மூர்த்தி காழ்புணர்ச்சியோடு இதை வெளியிட்டு இருக்கிறார்கள். இதற்கு காலம் கட்டாயம் பதில் அளித்துவிடும்.

வேலுமணி
கட்சியில் எடப்பாடி, கேபி முனுசாமிக்கு அடுத்து நான் மூன்றாவது ரேங்கில் இருக்கிறேன். அதனால் என்னை குறி வைக்கிறார்கள். அதிமுகவில் ஜாதி மோதல் இல்லை. ஓரளவிற்கு முன்பு இருந்தது. இப்போது இல்லை. எனக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. இதை வைத்து அதிமுகவை உடைக்க பார்க்கிறார்கள்.நான் யாரை பற்றியும் தவறாக பேச மாட்டேன். எனக்கு எந்த மனக்கசப்பும் இல்லை, என்று பொன்னையன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications