‛திமுக கூட்டணிக்கு குட்பை’.. பாஜகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய பாரிவேந்தர்! ‛டிமாண்ட்’ இதுதான்
சென்னை: இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தருடன் இன்று பாஜக தலைவர்கள் சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனியே கூட்டணி அமைத்து களம் காண உள்ளது. பாஜகவை, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றி உள்ளதால் அந்த கட்சி தனியே கூட்டணி அமைக்கிறது. கூட்டணியில் பல்வேறு கட்சிகளை கொண்டு வர பாஜக முயற்சி செய்து வருகிறது.

நேற்று பாஜக தலைவர்கள் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் ஒரு தொகுதியை ஒதுக்க கேட்டுள்ள நிலையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இதன் தொடர்ச்சியாக இன்று பாஜக தலைவர்கள் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தரை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். பாரிவேந்தர் தற்போது எம்பியாக உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் திமுக கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தற்போது அவர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடுன் இணக்கமாக செயல்பட்டு வருகிறார்.
இருப்பினும் பாஜக-பாரிவேந்தர் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை என்பது நடைபெறாமல் இருந்தது. இத்தகைய சூழலில் தான் இன்று சென்னையில் பாஜக தலைவர்கள் பாரிவேந்தரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் பாரிவேந்தரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூர் தொகுதியை கேட்டதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக கூட்டணியில் பிற கட்சிகள் இணையாத பட்சத்தில் மேலும் சில தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாரிவேந்தர் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு பாரிவேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பாஜக தலைவர்களுடன் கலந்து பேசி உள்ளோம். வரும் தேர்தலில் எங்களுக்கு எங்கெல்லாம் வாய்ப்புள்ளது என்பது பற்றி பேசினோம். தொகுதி எத்தனை என்பது பற்றி நாங்கள் பேசவில்லை. தேர்தல் அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஆகவே இன்னும் நாள் இருக்கிறது என்ற அடிப்படையில் முதல் சுற்று பேச்சுவார்த்தையாக எடுத்து கொள்கிறோம். அடுத்து சில நாட்களில் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.
நாளை பிரதமர் மோடி வருகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டு கொண்டார். அதில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நாங்கள் கலந்து கொள்ள உள்ளோம். இதற்கு பிறகு 2வது முறையாக விரைவில் சந்தித்து எங்களது தொகுதி எது என்பதும், எத்தனை தொகுதிகள் என்பது பற்றியும் தான் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். இப்போது விருப்பமான தொகுதியை கூறி உள்ளோம்
2014 முதல் மோடியுடன் தொடர்பில் ருக்கிறோம். பிரதமர் மோடியின் ஆட்சி தொடர வேண்டும். அவர் மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும். அது நடக்கத்தான் வேண்டும். உலகளவில் இந்தியர்களுக்கு மரியாதை இருக்கிறது என்றால் அது பிரதமர் மோடியால் தான். மோடி மீண்டும் ஆட்சியமைப்பது நூற்றுக்கு நூறு உறுதி. இதனால் தமிழகத்தில் இருந்து பாஜக கூட்டணிக்கு அதிக எம்பிக்கள் செல்ல வேண்டும். பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications