“டிரைவர் கூட இல்லாமல் எடப்பாடி தனியாதான் திரும்பி வருவாரு போல".. உதயநிதி ஸ்டாலின் அட்டாக்!
சென்னை: "எடப்பாடி பழனிசாமியின் முதல் ரவுண்டு சுற்றுப்பயணத்தில் பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டன. இன்றைக்கு 2வது ரவுண்டு போயிருக்கிறார். திரும்பி வரும்போது அவர் மட்டும் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு, டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை" எனப் பேசியுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் பயணத்தை காஞ்சிபுரத்தில் நேற்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின், செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமி ஆம்புலன்சில் செல்வார் என நான் பேசவில்லை. மனிதாபிமானம் உள்ள ஒரு மனிதன் அப்படி பேசுவானா? அதிமுக ஆம்புலன்சில் செல்லும் நிலையில் உள்ளதாகவே பேசினேன். அதிமுக கட்சி ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்படும்போது காப்பாற்றும் மருத்துவராக முதல்வர் வருவார் என்று கூறினேன்.
எந்தக் கட்சித் தலைவர் கூட்டம் போட்டாலும் அவசரத் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வரத்தான் செய்யும். மிகவும் வன்மத்தோடு பேசி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழிவிடுபவர் தான் உண்மையான தலைவர். எடப்பாடி பழனிசாமியால் பாஜகவிடமிருந்து அ.தி.மு.கவை காப்பாற்ற முடியவில்லை.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிதான் தொடர வேண்டும். அதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்யும் ஒரே நல்ல காரியம். அப்போதுதான் எங்கள் வேலையும் சுலபமாக இருக்கும். அதிமுகவினர் இதை ஒப்புக்கொள்வார்களா என தெரியாது. ஆனால் நான் முன்மொழிகிறேன். நீங்கள்தான் நிரந்தர பொதுச்செயலாளர்.
எடப்பாடி பழனிசாமியின் முதல் ரவுண்டு சுற்றுப்பயணத்தில் பாதி கூட்டணி கட்சிகள் காணாமல் போய்விட்டன. இன்றைக்கு 2வது ரவுண்டு போயிருக்கிறார். திரும்பி வரும்போது அவர் மட்டும் தனியா பஸ்சுல வந்தாலும் வருவாரு, டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை" எனப் பேசியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications