ஒரே நேரத்தில் 6 ஹீரோயின்கள்.. அல்லு அர்ஜுனுக்கு மச்சம்! எல்லாம் நேரம் தான் காரணம்..புகையும் பாலிவுட்
சென்னை: மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் அல்லு அர்ஜுன் புஷ்பா, புஷ்பா 2 கொடுத்த பிரம்மாண்ட வெற்றியால், பான் இந்தியா நாயகனாக உருமாறி இருக்கிறார், மேலும் ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற அட்லீயுடன் அவர் அடுத்த திரைப்படத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஆறு நாயகிகள் என கூறப்பட்டுள்ளது. சல்மான் கான், ஷாருக் கான் போன்றோரே இரண்டு மூன்று நாயகிகளுடன் மட்டுமே ஜோடி போட்ட நிலையில், அல்லுவை பார்த்து எல்லாம் நேரம் தான் காரணம் என புலம்பி வருகிறதாம் பாலிவுட்.
தெலுங்கு சினிமாவில் ஆரம்பத்தில் அறிமுகமான போது பல்வேறு விமர்சனங்களையும் தோல்விகளையும் சந்தித்தவர் அல்லு அர்ஜுன். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்தாலும், விடாமுயற்சியால் இன்றைக்கு இந்திய அளவில் மிகப்பெரிய நாயகனாக உருமாறி இருக்கிறார்.
குறிப்பாக புஷ்பா படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே புஷ்பா 2 படம் வெளியானது. தெலுங்கு சினிமா இதுவரை கண்டிராத அளவு பல வசூல் சாதனைகளை படைத்த அந்த படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அள்ளி பலரது புருவத்தையும் உயர வைத்தது.

இதற்கிடையே ஜவான் படத்தின் மூலம் ஷாருக் கானுக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்த கோலிவுட் இயக்குனர் அட்லீயுடன் அல்லு அர்ஜுன் இணையப் போகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரத்தில் பேசுபொருளானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக ஹாலிவுட்டில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் களமிறக்கப்பட்டு இருக்கின்றனர். படம் குறித்த அறிவிப்பே ஒரு ஹாலிவுட் படம் போல இருந்தது. தற்போது இந்த படத்துக்கான எதிர்பார்ப்புகள் எகிறி இருக்கிறது. படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் நாயகன், இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் தவிர்த்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. குறிப்பாக படத்தின் நாயகிகள், இசை அமைப்பாளர் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஏஆர் ரகுமான் அல்லது அனிருத் இந்த படத்துக்கு இசை அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பான் இந்தியா அல்ல.. பான் வேர்ல்ட் படமாக இந்த படம் இருக்கும் என அடித்து சொல்கின்றனர் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள்.
இது ஒரு புறம் இருக்க படம் குறித்து தற்போது வெளியாகி உள்ள அப்டேட் தான் தெலுங்கு திரையுலகம் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் பேசு பொருளாக இருக்கிறது. வழக்கமாக அட்லீ படங்கள் போல் அல்லாமல் சயின்ஸ் பிக்சன் கதை அம்சத்துடன் இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது. பொதுவாகவே அட்லியின் படங்கள் என்றாலே இரண்டு மூன்று நாயகிகள் இருப்பார்கள். ஆனால் அல்லு அர்ஜுனுக்காக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஆறு ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக தெலுங்கு தமிழ் பாலிவுட் ஆகிய மொழிகளில் முன்னணியில் இருக்கும் நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா, தீபிகா படுகோன், ஸ்ரீலிலா, கயாடு லோகர், பூஜா ஹெக்டே, ஜான்வி கபூர், மிருணாள் தாக்கூர், பாக்யஸ்ரீ போர்ஸே உள்ளிட்ட நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சொன்னது போல ஷாருக்கான், சல்மான்கான் போன்ற நாயகர்கள் கூட இரண்டு மூன்று நாயகிகளுடன் தான் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்கள். ஆனால் அல்லுவுக்கு ஆறு ஜோடிகளா என பாலிவுட்டே பரபரப்பாக பேசி வருகிறதாம். இன்னும் சில நாட்களில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்கின்றனர் தெலுங்கு திரை உலகத்தினர்.












Click it and Unblock the Notifications