"அமரன்" முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா.. யார் இவர்? இப்போது எங்கு இருக்கிறார் தெரியுமா?
சென்னை: மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் அமரன். இந்த படத்தில் முகுந்த் வரதராஜன் மட்டுமின்றி, அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் குறித்தும் பல காட்சிகள் இடம்பெற்று இருக்கும். ரியல் லைஃப்பில் இந்து ரெபேக்கா வர்கீஸ் யார்.. அவர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது குறத்து பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படத்தில் அப்படியே இந்து ரெபேக்கா வர்கீஸாகவே வாழ்ந்து இருப்பார் சாய் பல்லவி. அந்தளவுக்கு நடிப்பு தத்ரூபமாக இருக்கும்.

ரியல் லைஃப்பில் யார் இந்த இந்து ரெபேக்கா வர்கீஸ்.. அவரது பின்னணி என்ன.. அவர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்து ரெபேக்கா வர்கீஸ்: கிறிஸ்துவரான இந்து ரெபேக்கா வர்கீஸ் கேரளாவைச் சேர்ந்தவர். இவர் தனது கல்லூரி படிப்பிற்காகச் சென்னை வந்தார். அதே கல்லூரியில் தான் முகுந்த் படித்தார். இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு அவர்களுக்குத் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2011ம் ஆண்டு அர்ஷியா முகுந்த் என்ற பெண் அழகிய குழந்தை பிறந்தது.
இருவரும் பல ஆண்டுகள் காதலித்த போதிலும், அவர்களின் திருமண வாழ்க்கை ஐந்து ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இந்து ரெபேக்காவுக்கு 31 வயதான போது, அவரது கணவர் மேஜர் முகுந்த் வரதராஜ் 2014ல் பயங்கரவாதிகளுடன் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்போது இந்த தம்பதியின் குழந்தைக்கு வெறும் 3 வயதுதான் ஆகியிருந்தது.

துணிச்சல்: தனது கணவனின் தியாகத்தை இந்து கையாண்ட விதம் நெகிழ்ச்சி ஏற்படுத்துவதாக இருந்தது. அப்போது அவர் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "இன்று நாடு பார்க்க வேண்டியது அவரது (கணவன் முகுந்த் வரதராஜன்) வீரத்தைத் தான். என்னுடைய வருத்தத்தை இல்லை" என்று கூறியிருந்தார்.
மேஜர் முகுந்த் வரதராஜன் தியாகத்திற்கு அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. அதை இந்து ரெபேக்கா அன்றைய குடியரசுத் தலைவர் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் அப்போது உடன் இருந்தார்.
படத்திற்கு சம்மதித்தது ஏன்: முன்னதாக அமரன் பட பிரோஷன் நிகழ்ச்சியில் ஏன் தனது கணவரின் படத்திற்குச் சம்மதம் தெரிவித்தார் என்பது குறித்தும் அவர் விளக்கியுள்ளார். அதில் அவர், "அவர்கள் இந்த படம் குறித்துக் கேட்ட போது முதலில் முகுந்த்திற்கு கமல் எந்தளவுக்குப் பிடிக்கும் என்பதே எனது மனதில் வந்து சென்றது. அவருக்கு அன்பே சிவம் ரொம்பவே பிடிக்கும். இது முகுந்த்திற்கு பிடிக்கும் என்றே நான் முதலில் நினைத்தேன்.
முகுந்த் 2014இல் இறந்துவிட்டார்.. முதல் இரண்டு ஆண்டுகளில், நான் நிறைய நிகழ்வுகளில் கலந்துகொண்டேன். அப்போது பெருமையாக இருந்தது. அதேநேரம் துக்கம் அதிகமாக இருந்தது. அதேநேரம் நான் எனது மகளுக்காக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். இதன் காரணமாகவே கடந்த எட்டு வருடங்களாக முகுந்த் பற்றிப் பேசவில்லை.
இந்த நேரத்தில் தான் ராஜ்குமார் எங்களிடம் வந்து பேசினார். அப்போது இந்த யூனிவர்ஸ் ஏதோ சொல்ல வருவதாகவே உணர்ந்தேன். இதன் காரணமாகவே ஒப்புக் கொண்டோம். இது முகுந்திற்கு மட்டுமே.. இது அவரை மீண்டும் உயிரோடு கொண்டு வந்தது போல.. அந்த அழகிய தருணங்களை மீண்டும் வாழ விரும்புகிறேன். இது கடினமானது தான்.. அதேநேரம் நிச்சயமாகப் பெருமையாகவும் இருந்தது" என்று அவர் குறிப்பிட்டார்..
இப்போது எங்கே இருக்கிறார்: ரெபேக்கா வர்கீஸ் இப்போது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள கிரேஸ்டன்ஸ் என்ற இடத்தில் வசித்து வருகிறார். அமரன் படத்திலேயே அவர் ஆசிரியை ஆக பயிற்சி பெறுவது போலக் காட்டப்பட்டு இருக்கும். அதுபோலவே இப்போது அவர் ஆஸ்திரேலியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.












Click it and Unblock the Notifications