Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அம்பானி வீடே வக்ஃபுக்கு சொந்தம்? பாஜக அரசு மீட்டு தருமா? ஜவாஹிருல்லா அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியப் பணக்காரர் அம்பானியின் வீடே வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.

வக்ஃபு வாரியத்தின் அதிகாரங்களைக் குறைக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நேற்று மக்களவையில் தாக்கல் செய்தது. இந்தப் புதிய மசோதாவைச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். முன்னதாக அதிகபட்சம் ஒரு சட்டத்தில் பொதுவாக 10 திருத்தங்கள் வரை செய்துள்ளனர். ஆனால், வக்ஃபு வாரிய சட்டத்திருத்தத்தில் இந்த முறை 40க்கும் மேற்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பல ஷரத்துகளை ரத்து செய்ய புதிய மசோதா முன்மொழிந்துள்ளது. இஸ்லாமியப் பெண்கள், முஸ்லிம் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல் உட்பட, பல மாற்றப்பட்டுள்ளன.

waqf board Jawahirullah

ஆகவே, இந்தச் சட்டத்திருத்தம் தொடர்பாக இஸ்லாமிய மக்களிடம் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமியத் தலைவர்களில் ஒருவரான அசாதுதீன் ஓவைசி, "இந்த மசோதா அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25வது சட்டப் பிரிவுகளின் விதிகளை மீறுகிறது. இது பாரபட்சமானது. இந்த மசோதாவைக் கொண்டு வந்ததன் மூலம் மத்திய அரசு தேசத்தை ஒன்றிணைக்காமல் பிளவுபடுத்தும் வேலையைச் செய்துள்ளது. நீங்கள் முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதாவே ஒரு சான்று" எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா இந்தச் சட்டத்திருத்தில் உள்ள ஆபத்துகள் பற்றி விரிவாகப் பேசி இருக்கிறார். அவர் ஒரு ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அம்பானியின் வீடே வக்ஃபு வாரியத்திற்குச் சொந்தமானது என்று கூறி ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளார். ஜவாஹிருல்லா பேசும் போது, ஜவாஹிருல்லா, “கடந்த 1997ஆம் ஆண்டு மக்களவையில் மேற்குவங்கத்தில் உள்ள வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சர்ச்சை எழுப்பப்பட்டது.

ஆகவே அதை விசாரிக்கக் கூட்டு நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு இந்தியா முழுவதும் பயணித்தது. தமிழ்நாட்டுக்கும் வந்தது. அவர்கள் வக்ஃபு சொத்துகளைப் பாதுகாப்பதற்காக என்ன மாதிரியான நெறிமுறைகளை, சட்டங்களை வகுக்கலாம் என்று கலந்தாலோசித்தனர். இந்தியா முழுவதும் கேட்கப்பட்ட கருத்துகளைக் கொண்டு ஒரு அறிக்கையை நாடாளுமன்றத்தில் அளித்தார்கள். அதன்பிறகு நீதியரசர் ராஜேந்திர சச்சார் கமிட்டி ஒரு அறிக்கையைப் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகள் எல்லாம் வந்த பிறகு மீண்டும் ரஹ்மான்கான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரையில் அடிப்படையில் 2013இல் வக்ஃபு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் திருத்தம் எளிதாகச் செய்யப்படவில்லை. பல தரப்புகளை நேரில் சந்தித்துக் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டன. ஆனால், இப்போது பாஜக அரசு செய்துள்ள சட்டத்திருத்தம் என்பது ஒட்டுமொத்தமான வக்ஃபு வாரியத்தின் அதிகாரத்தையும் பிடுங்கிவிட்டார்கள். வக்ஃபு சொத்தை ஆக்கிரமித்தவர்களை 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கலாம் என்ற சட்டப்பிரிவையே நீக்கிவிட்டார்கள். ஒரு இடம் வக்ஃபு சொத்தா? அல்லது இல்லையா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் வக்ஃபு வாரியத்திற்கு இருந்ததை நீக்கிவிட்டு, அந்த அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ளது ஏன்? மேலும் 2013 சட்டத் திருத்தத்தின் படி வக்ஃபு சொத்துகளை அளவிடுவதற்கான அதிகாரம் சர்வே கமிஷ்னருக்கு இருந்தது. அவர் வருவாய்த்துறையைச் சேர்ந்தவர். அவர் அரசு அதிகாரிதான். அதை ஏன் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தார்கள்.

ஏற்கெனவே பாஜக பாபர் மசூதியை இஸ்லாமியர்களிடம் இருந்து அபகரித்து. அந்த மசூதியையே இடித்துவிட்டார்கள். அதைப் போல இந்தியா முழுவதும் உள்ள வக்ஃபு சொத்துகளை அபகரிக்க ஒரு திட்டத்தைச் செய்யவே இந்தச் சட்டத்திருத்தத்தை பாஜக கொண்டுவந்துள்ளது. ஏற்கெனவே வக்ஃபு வாரியத்தின் தலைமைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரியைத்தான் மாநில அரசுதான் நியமிக்கிறது. அவர்களின் அதிகாரத்தைப் பிடுங்க வேண்டியதன் அவசியம் என்ன? வக்ஃபு வாரியத்திற்கு வரும் வருவாயில் 7% மாநில வக்ஃபு வாரியத்திற்கு அரசு வழங்க வேண்டும். அதை வைத்துத்தான் அந்த அமைப்பு இயங்கும். பாஜக அரசு இந்தச் சட்டத்திருத்தத்தில் 5% ஆக நிதியைக் குறைத்துள்ளது.

வக்ஃபு வாரியத்தைப் பலப்படுத்தவே இதைச் செய்கிறோம் என்றது பாஜக. இந்த நிதியைக் குறைப்பதன் மூலம் எப்படி வக்ஃபு வாரியத்தை வலிமைப்படுத்த முடியும்? மன்மோகன் சிங் அரசு ஆட்சியிலிருந்த போது இஸ்லாமிய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வந்தது. அதை ஆட்சிக்கு வந்ததும் நிறுத்தியது பாஜக அரசு. இவர்களா வக்ஃபு சொத்துகளைக் காப்பாற்றப் போகிறார்கள்?

வக்ஃபு வாரியத்தின் செயல்பாடுகளை முழுக்க அரசு கவனிக்கிறது. அதன் செயல்பாடுகள் அதிகாரிகள் ஆவணப்படுத்தி வருகிறார்கள். தகவலறியும் உரிமைச் சட்டத்தின் படி யார் வேண்டுமானாலும் வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கை குறித்த சந்தேகத்திற்கு விளக்கம் பெற முடியும். அதைக் கொண்டு வந்தது காங்கிரஸ் அரசு. அந்தத் தகவலறியும் உரிமைச் சட்டத்தையே முடக்கிப் போட்டுள்ள பாஜக அரசு வக்ஃபு வாரியத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரப் போகிறோம் என்கிறது வேடிக்கையாக இல்லையா? ஒருவேளை வக்ஃபு வாரியத்தில் முறைகேடு என்றால் நீதிமன்றம் போகலாம். சட்டப்படி வழக்குப் போடலாம். அப்புறம் எப்படி வக்ஃபு வாரியத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று பாஜக அரசு சொல்கிறது?

அம்பானிக்கு மும்பையில் ஒரு வீடு இருக்கிறது. இது ஈசாபாய் கரீம்பாய் கோஜா வக்ஃபுக்கு சொந்தமான சொத்து. இதை நான் சொல்லவில்லை. மும்பை வக்ஃபு வாரியத்தின் தலைமை செயல் அலுவலரே நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் சொல்லி இருக்கிறார். இந்தியா முழுமைக்கும் 8 லட்சத்து 50 ஆயிரம் வக்ஃபு வாரியம் உள்ளது. அதற்கு 9 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. அதில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அது தொடர்பான வழக்குகள் உள்ளன. அதை மட்டுப்படுத்தவே சட்டத்தை மாற்றுகிறார்கள்.

மத்திய அமைச்சர் திருச்செந்துறை கோயில் பற்றிச் சொல்லி இருக்கிறார். அது சிறிய கிராமம். அதை ராணிமங்கம்மா ஆட்சி செய்தபோது 350 ஏக்கர் நிலங்களை வக்ஃபு போர்டுக்கு அளிக்கிறார். இந்தக் கிராமம் 650 ஏக்கர் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுவிட்டது. 1950இல் தமிழ்நாடு அரசு அனைத்து வக்ஃபு சொத்துகளையும் சர்வே செய்தது. அதில் 350 ஏக்கர் நிலம் வக்ஃபுக்கு சொந்தமானது என்ற ஆவணம் இருக்கிறது. செப்புப் பட்டயங்கள் கூட அதற்கான ஆவணங்கள் உள்ளன. இந்தக் கிராமத்தில் யார் வேண்டுமானாலும் சொத்தை வாங்கலாம். விற்கலாம். அதில் ஒரு தடையும் கிடையாது” என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+