விஜய் கையில் அம்பேத்கர் புத்தகம்; தீ பறக்கும் மாநாட்டு உரை! ரஞ்சித், பிஎஸ்பிக்கு செக்!
சென்னை: விக்கிரவாண்டி மாநாட்டில் பேசுவதற்காக விஜய் அம்பேத்கர் புத்தகத்தை மிகத் தீவிரமாகப் படித்து வருகிறார் என்ற தகவல் உறுதியாகி இருக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விக்கிரவாண்டியில் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. முறையாக அனுமதி வழங்குவதற்கு முன்னதாக மாநாடு குறித்த 21 கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும்படி காவல்துறை தரப்பிலிருந்து தவெக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான திமுக, இந்த மாநாட்டை தடுப்பதற்கான முயற்சிகளை மறைமுகமாக ஈடுபடுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூட ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அதைப் பற்றி சில தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று விவாதித்தும் வருகின்றனர்.

ஆனால், 21 கேள்விகள் என்பது வழக்கமாக காவல்துறையினர் கேட்பதுதான். இது ஒரு நடைமுறை. அதில் உள் அரசியல் எல்லாம் இல்லை. பல கட்சியினர் மாநாடு நடத்தி வருகிறார்கள். அவர்களை எல்லாம் திமுக அரசு தடுக்கவேண்டும் என்று நினைத்தால் செய்திருக்கலாமே? அப்படி என்றுமே திமுக செய்தது இல்லை என்கிறார்கள் உண்மையான உடன்பிறப்புகள்.
எப்படியும் மாநாட்டுக்கு அனுமதி உறுதியாகக் கிடைத்துவிடும் என்றே தவெக நிர்வாகிகள் தகவல் சொல்கிறார்கள். மேலும் மாநாட்டுக்கான பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருவதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். கடந்த மாதம் 22 ஆம் தேதி விஜய் தனது கட்சிக் கொடியினை அறிமுகம் செய்து வைத்துவிட்டு, கொடிக்கான விளக்கத்தையும் கட்சியின் கொள்கையையும் மாநாட்டில் விரிவாக தெரிவிப்பதாகக் கூறியிருந்தார்.
அதற்கு முன்பே கொடியில் உள்ள யானை சின்னம் தொடர்பாக பிஎஸ்பி எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறது. அந்த விசயங்கள் அனைத்தையும் விஜய் தனது மனதில் அசைப்போட்டு, என்ன விளக்கம் அளிக்கலாம் என்று தயாராக இருக்கிறார். அவர் இப்போதே பேசிவிட்டால் மாநாடு தொடர்பான செய்தி ஹைலைட் ஆகாது. அப்போது ஹைலைட் ஆகவேண்டும் என்பதற்காகவே உடனடியாக விளக்கம் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார் என்கிறார்கள் தவெக தலைமையக பணியாளர்கள்.
இந்நிலையில் தனது கட்சிக் கொள்கைகள் பற்றி அறிவிப்பதற்கு முன்பாகவே அது குறித்த புரிதல் தனக்கு இருக்கவேண்டும் என்பதற்காக விஜய், பல தரப்பு வாதங்களைக் கேட்டு வருகிறார் என்கிறார்கள். இந்த யானை சின்னம் பிஎஸ்பியின் சின்னம் எனத் தெரிந்துதான் விஜய் தேர்வு செய்தார். அதற்குக் காரணம், தலித் ஓட்டுகளைக் குறிவைப்பதற்காகத்தான்.
சமீபத்தில் ஆம்ஸ்ட்ராங் மறைவின் போது ஏற்பட்ட அனுதாப அலையை அவர் உணர்ந்துள்ளார். முதலில் கட்சிக் கொடியில் யானை வைப்பதற்கான யோசனையே இல்லை. வாகை மலர் மட்டுமே அவர் மனதிலிருந்தது. பின்னர்தான் யானையைத் திட்டமிட்டுச் சேர்த்தார்கள். அதற்குக் காரணம், இயக்குநர் ரஞ்சித் மற்றும் பிஎஸ்பி ஓட்டுகளை தன் பக்கம் இழுக்கத்தான் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
தவெகவை பொறுத்தவரை அது இடதுசாரி தலித் கொள்கைகளை உள்ளடக்கிய கட்சியாகவே இருக்கும். வலதுசாரி ஆதரவு இருக்காது என்றும் இவர்கள் சொல்கிறார்கள். அதனால்தான் விஜய் தனது கட்சி நிர்வாகிகளை காமராஜ், அம்பேத்கர் ஆகிய இரண்டு தலைவர்களையும் படிக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார். தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய்யின் பேச்சு மிகச் சிறப்பாக இருக்கவேண்டும் என்றும் அவர் ஏதேனும் தவறாகப் பேசிவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருந்து வருகிறார்.
அதற்காக அவர் அம்பேத்கரின் ஒட்டுமொத்த படைப்புகளைப் படித்து ஆலோசனை வழங்க ஒரு குழுவை அமைத்தும் உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் தனது புரிதலை மேம்படுத்திக் கொள்ள அவர் அம்பேத்கர் பற்றி தமிழில் வெளியான 'அம்பேத்கர் அன்றும் இன்றும்' என்ற நூலைத் தீவிரமாகப் படித்து வருகிறார் என்று ஒரு நிர்வாகி நமக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்குப் பேசியுள்ள தவெக செய்தித் தொடர்பாளர் ஜெகதீஸ்வரன், "விஜய் அரசியலுக்கு வர முடிவு செய்ததிலிருந்து படிப்பதற்காக நிறைய நேரம் ஒதுக்குகிறார் 'நீட்' வேண்டாம் என அறிவிப்பதற்கு முன்பே அவர் கல்வி, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வல்லுநர்களை அழைத்துச் சந்தித்தார். அது தொடர்பான புத்தகங்களைப் படித்தார். நீட் தேர்வின் சிக்கல் என்ன? அதன் நன்மை, தீமைகள் என்ன என்று பகுப்பாய்வு செய்த பிறகு, அவர் ஒரு முடிவுக்கு வந்தார்" என்று கூறியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி முதல்முறையாகக் கொள்கைப் பிரகடனம் செய்தார் விஜய். இந்த நீட் தேர்வு மாநில அரசுகளின் உரிமைகளுக்கு எதிரானது என்றும், கிராமப்புற மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பாதிக்கக்கூடியது என்றும் அவர் கூறியிருந்தார். இந்த முடிவை விஜய் எடுப்பதற்கு முன்பாக ஓய்வுபெற்ற நீதிபதி, மூத்த கல்வியாளர். மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப் பலருடன் அவர் ஆலோசனை நடத்தி இருக்கிறார். பின்னர், ஏ.கே. ராஜன் குழு அறிக்கையைப் படித்து ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.
ஆனால், இவரது கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் இவரைப் பற்றி உயர்வான கருத்தை முன்வைக்கும் அதேவேளையில் விஜய் கடைப்பிடித்து வரும் மெளனம் பற்றி பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். கட்சி கொடி விழாவில் கூட தன்னை மட்டுமே மையமாக வைக்கும் ஒரு தோற்றத்தை முன்வைக்கிறார் விஜய். கட்சியின் அடுத்த கட்ட நிர்வாகிகள். தலைவர்களை அடையாளப்படுத்த மறுக்கிறார். கொடி அறிமுக விழா ஏதோ சினிமா ஆடியோ வெளியீட்டு விழாபோல் நடத்தப்பட்டது.

கடந்த மாதம் பிப்ரவரியில் கட்சி தொடங்கி அவர் மக்கள் நலம், மக்கள் சார்ந்த போராட்டம் என எது குறித்தும் வாய் திறக்கவில்லை என்று சொல்கிறார்கள் சிலர். அப்படி எல்லாம் இல்லை. அவர் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க விரும்புகிறார். ஒரு பிரச்சினை பற்றிய தெளிவு பெற்ற பிறகே கருத்துச் சொல்ல விரும்புகிறார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் கட்சி மாநாட்டிற்குப் பிறகு விஜய் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்குவார் என்று சொல்கிறார் ஜெகதீஸ்வரன்.
எப்படிப் பார்த்தாலும் விஜய் டார்கெட் செய்வது பட்டியலின மக்களின் வாக்கு வங்கியைத்தான் என்பது புரிகிறது. அவர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை அடையாளப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு பட்டியலின மற்றும் நரிக்குறவர் இன மக்கள் என அடிமட்ட அளவில் தொண்டர்கள் இருந்தனர். திமுகவை அண்ணாதுரை தொடங்கிய போது அது தலித் மக்களின் அடையாளத்துடன் தான் பார்க்கப்பட்டது.
அதை எல்லாம் உணர்ந்து காலத்திற்கு ஏற்ப அம்பேத்கரை விஜய் கையில் எடுத்துள்ளார். அதன் பொருட்டு விசிக தலைவர் திருமாவளவனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்கிறார். எப்படிப் பார்த்தாலும், ரஞ்சித், ஆம்ஸ்ட்ராங் ஆகிய ஆதரவு சக்திகளை தவெகவுக்குள் கொண்டு வருவதில் விஜய் உறுதியாகச் செயல்பட்டு வருகிறார் என்றே தெரியவருகிறது.












Click it and Unblock the Notifications