Bhagyaraj: இந்தி, இங்கிலீஷ் தெரியாது! ஆனாலும் அமிதாப்பை இயக்கிய பாக்யராஜ்! யார் இவர்?
சென்னை: ஆங்கிலம், இந்தி தெரியாமல் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனையே இயக்கியவர் பாக்யராஜ். யார் இவர் என்பதை பார்க்கலாம். கொங்கு தமிழில் அழகாக வசனங்களை உச்சரிப்பதிலும் நடிகர், நடிகைகளுக்கு வசனங்களை சொல்லி கொடுப்பதிலும் பாக்யராஜுக்கு நிகர் யாருமில்லை.
திரைக்கதை மன்னன், பல்துறை வித்தகர் என அழைக்கப்படும் பாக்யராஜ், மாரடைப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். யார் இவர் என்பதை பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தை அடுத்த வெள்ளாங்கோவில் பகுதியை சேர்ந்தவர். இவரது பெற்றோர் கிருஷ்ணசாமி- அமராவதி ஆகியோராவர். இவர் மூன்றாவது மகனாவார்.
செல்வராஜ், தன்ராஜ் ஆகிய இரு அண்ணன்கள் உள்ளனர். தமிழ்த் திரைத்துறையில் நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குநர், பத்திரிகையாளர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பன்முகத் திறன்களை கொண்டவர்.
இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
கிழக்கே போகும் ரயில் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியதுடன் கவுண்டமணியுடன் அந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்திலும் இரு காட்சிகளில் நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார். புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தா மட்டுமில்லாமல் கதாநாயகனாக அறிமுகம் செய்தார்.இதையடுத்து சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படத்தை முதல் முதலில் 1979 ஆம் ஆண்டு இயக்கினார். இதையடுத்து ராஜேஷ் கதாநாயகனாக நடித்த கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் நடித்திருந்தார்.
மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் வெற்றிப் படங்களாயின. விடியும் வரை காத்திரு என்னும் திரைப்படத்தைப் பாக்யராஜ் இயக்கி நடித்தார். பாக்யராஜ் தனது முத்திரையை முழுமையாகப் பதிந்து வெற்றி ஈட்டிய திரைப்படங்களாக அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சு போன்றவை கருதப்படுகின்றன.
டார்லிங், டார்லிங், டார்லிங் வெற்றிப்படத்தை இயக்கி அதில் நடித்த பூர்ணிமாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். 1982 ஆம் ஆண்டு முந்தானை முடிச்சு, படத்தில் ஊர்வசியை அறிமுகம் செய்தார்.
தனது படங்களில் நடித்திருந்த பிரவீனாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் உடல்நலக் குறைவால் இறந்தார். இதையடுத்துதான் பூர்ணிமாவை மணந்தார். இந்த திருமணத்திற்கு எம்ஜிஆர் வருகை தந்து திருமாங்கல்யம் எடுத்துக் கொடுத்தார். இந்த தம்பதிக்கு சரண்யா, சாந்தனு ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இருவரையும் நடிகர், நடிகையாக்கினார். ஆனால் இருவரும் சோபிக்கவில்லை.
எம்ஜிஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ் அதிமுகவில் இணைந்தார். பிறகு அக்கட்சியிலிருந்து வெளியேறி எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தினார். இந்தக் கட்சி 1991 கேரள சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. அதில் ஒரு வேட்பாளர் 87 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இந்தக் கட்சி ஆரம்பக் கட்டத்திலேயே படுதோல்வி அடைந்தது. பாக்யராஜ் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தார். ஏப்ரல் 5, 2006 அன்று, கட்சித் தலைவர் கருணாநிதி முன்னிலையில் பாக்யராஜ் திமுகவில் இணைந்தார், அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெ ஜெயலலிதாவை விமர்சித்தார். திமுகவில் இருந்து விலகி அரசியலில் பார்வையாளராக இருந்து வந்தார்.
பாரதிராஜாவை போல் பாக்யராஜ், பாண்டியராஜன், ரா.பார்த்திபன், வி.சேகர், லிவிங்ஸ்டன், ஜி. எம். குமார் ஆகியோர் வெற்றிகரமான இயக்குநர்களாகத் திகழ்ந்தனர். பாக்யராஜுக்கு இந்தி, ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் இந்தியில் அமிதாப்பை வைத்து ஏக் ஹை பூல் என்ற படத்தை இயக்கியிருந்தார். இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 படங்களில் நடித்தும் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 25 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
பாக்யராஜ் 50 ஆண்டு திரைப்பயணத்தை முடித்தமைக்காக அவருக்கு பாராட்டு விழா நடந்தது. அது போல் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைத்தது.












Click it and Unblock the Notifications