எம்ஜிஆரின் வாரிசு.. பாக்யராஜ் தொடங்கிய அரசியல் கட்சி.. கனவை கலைத்த மக்கள்
சென்னை: பிரபல இயக்குநரும் , நடிகருமான கே. பாக்யராஜ் கடந்த 1989-ம் ஆண்டில் சொந்தமாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியது பலருக்கும் தெரியாது. இன்றைக்கு தவெக தலைவர் விஜய் முதல்வராக இருக்கிறார். கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் விஜய் கட்சி ஆரம்பித்தது போல், அந்த காலத்தில் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் பாக்யராஜ் அரசியல் கட்சி ஆரம்பித்தார். தமிழக அரசியல் களத்தில் அது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவரால் சினிமாவை போல் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை...
பாக்யராஜ் தொடங்கிய கட்சியின் பெயர் "எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்". புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தமானவர்களில் ஒருவராக பாக்யராஜ் இருந்தார். எம்.ஜி.ஆர் தனது வாழும் காலத்திலேயே பாக்யராஜை தனது "அரசியல் வாரிசு" என்று பகிரங்கமாக அறிவித்தும் இருந்தார். இதனால் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு (1987-ல்), அ.தி.மு.க-வில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் அரசியல் சூழல்களைக் கருத்தில் கொண்டு, எம்.ஜி.ஆரின் உண்மையான கொள்கைகளைத் தொடரப் போவதாகக் கூறி பாக்யராஜ் இந்தக் கட்சியை தொடங்கினார். பாக்யராஜ் தொடங்கிய கட்சியின் கொடியில் எம்.ஜி.ஆரின் முகம் பொறிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையத்தால் இக்கட்சிக்கு "இருசக்கர வாகனம்" சின்னம் ஒதுக்கியது.

கட்சி தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் பாக்யராஜின் சினிமா புகழால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பலரும் அவர் பிரச்சாரம் செய்த போது ஓடிப்போய் பார்த்தனர். 1989-ம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி சில இடங்களில் போட்டியிட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு இடத்தைக் கூட இந்த கட்சியால் கைப்பற்ற முடியாமல் பெரும் தோல்வி அடைந்தது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, சினிமா துறையினர் முழுநேர அரசியலில் நீடிப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை பாக்யராஜ் அதன்பின்னர் மெல்ல மெல்ல உணர்ந்தார். அத்துடன் கட்சியைத் தொடர்ந்து நடத்துவதற்கான பொருளாதார மற்றும் கட்டமைப்பு ரீதியாக பாக்யராஜ கடும் சவால்களை எதிர்கொண்டார்.
இதனால் தேர்தல் தோல்விக்குப் பிறகு பாக்யராஜ் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார். பின்னர் மீண்டும் தனது சினிமா பணிகளில் கவனம் செலுத்தினார். அதனால் அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம்" காலப்போக்கில் முழுமையாகக் கலைக்கப்பட்டது. அதன்பின்னர் பல்வேறு காலகட்டங்களில் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க போன்ற கட்சிகளுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரங்கள் செய்தார். இறுதியாக கட்சி விவகாரங்களில் இருந்து ஒதுங்கி, சினிமா நிகழ்வுகளில் மட்டுமே பங்கேற்று வந்தார். அவரது இழப்பு சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.














Click it and Unblock the Notifications