சூப்பர் பிளான்! மின்வெட்டு பிரச்சினையை தீர்க்க களத்தில் இறங்கிய தமிழக அரசு.. பறந்த முக்கிய ஆர்டர்
சென்னை: தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இதைச் சமாளிக்கத் தமிழ்நாடு அரசு சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது தான் கோடைக் காலம் தொடங்கி உள்ள நிலையில், மாநிலத்தின் மின் தேவையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்தச் சூழலில் மாநிலத்தில் ஆங்காங்கே தொடர்ச்சியாக அறிவிக்கப்படாத மின்தடையும் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மின்சார பாதிப்பு
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே இப்படி அறிவிக்கப்படாத மின் தடை தொடர்கிறது. திடீரென ஏற்படும் அறிவிக்கப்படாத மின் தடை காரணமாகப் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையால் மாணவர்களால் படிக்க முடிவதில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகள், முதியவர்களும் இந்த மின் தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்,

தமிழக சட்டசபை
தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுகவினர் இந்த விவகாரத்தைச் சட்டசபையில் எழுப்பினர். மேலும், இது தொடர்பாகக் கவன ஈர்ப்பு தீர்மானத்தையும் அதிமுகவினர் கொண்டு வந்தனர். இதற்கு விளக்கம் அளித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து மின் விநியோகம் தடைப்பட்டதால் மின்தடை ஏற்பட்டதாகத் தெரிவித்தார், மேலும், தனியார் நிறுவனங்களிடம் கூடுதலான மின்சாரத்தையும், மாநில மின் உற்பத்தியையும் அதிகரித்து மின்தடையை சரி செய்யப் போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

அதிமுக வெளிநடப்பு
இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்காமல் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அரசு முறையாகச் செயல்படவில்லை. கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு மின்சார உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்வெட்டு காரணமாக இரவு நேரங்களில் தூங்கக் கூட முடியவில்லை" என்று சாடியிருந்தார்,

நிலக்கரி
இதற்கிடையே மின் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையை இப்போது ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மின் உற்பத்தி செய்ய மொத்தம் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. இருப்பினும் இப்போது 50 ஆயிரம் டன் அளவுக்கே நிலக்கரி இருப்பதால் மின் தடை ஏற்படுவதாக மின் வாரியம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தோனேசியா
எனவே, நிலக்கரி கையிருப்பை அதிகரிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கி உள்ளது. இதற்காக இந்தோனேசியாவில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு டெண்டரும் கூட வெளியிட்டு இருந்தது. அதில் 4 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில், குறைந்த விலை கோரிய இரு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அடுத்த இரு மாதங்களில் நிலக்கரி இறக்குமதி தொடங்க வாய்ப்புள்ளது. இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி தொடங்கும் போது, மின் உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் மின் உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்தாண்டு இறுதிக்குள் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications