கடும் நெரிசல்.. சென்னை கிளாம்பாக்கத்தில் தவித்த பயணிகள்! பெருங்களத்தூர், வண்டலூரில் ஊர்ந்த வாகனங்கள்
சென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல அரசு பஸ்களில் நள்ளிரவிலும் கூட்டம் அலைமோதியது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நள்ளிரவிலும் ஏராளமான மக்கள் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியதோடு போதிய பேருந்துகள் இல்லை என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக சென்னையில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி வேளையில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் என்பது அரசு போக்குவரத்து துறை சார்பில் இயக்கப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் கடந்த 28 ம் தேதி முதல் இன்று வரை கிளாம்பாக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது தனியார் பஸ்களில் டிக்கெட் கட்டணம் என்பது பலமடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்பட பல இடங்களுக்கு செல்லும் தனியார் பஸ்களில் டிக்கெட் விலை உச்சம் தொட்டுள்ளது. அதேபோல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ் மற்றும் அரசு பஸ்களில் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். நேற்று முன்தினத்தை ஒப்பிடும்போது நேற்றைய தினம் சென்னை கிளாம்பாக்கத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக நள்ளிரவிலும் கூட அதிகமான மக்கள் சொந்த ஊர் செல்ல கிளாம்பாக்கம் வந்தனர்.
இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. அதோடு பஸ்களில் நின்றபடியும், படிகளில் தொங்கியபடியும் பயணிகள் பயணம் செய்தனர். இந்த வேளையில் திண்டிவனம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே தான் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களில் இதுவரை 2.31 லட்சம் பேர் பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இன்றும் ஏராளமானவர்கள் சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களில் பயணிக்க உள்ளனர். இதனால் சிறப்பு பஸ்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை என்பது 3 லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க நேற்றைய தினம் சென்னையில் இருந்து ஏராளமானவர்கள் தங்களின் சொந்த வாகனங்களில் ஊர்களுக்கு புறப்பட்டனர். இதனால் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. குறிப்பாக பெருங்களத்தூர், வண்டலூரில் கடும் போக்குவரத்து நெரிசல் என்பது இருந்தது. சிறப்பு பஸ்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications