அடித்து நொறுக்கும் வெயிலுக்கு குட்டி ப்ரேக்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை! எங்கெல்லாம் தெரியுமா!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத ஒரு சூழலே ஏற்பட்டுள்ளது.

குறிப்பாகக் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் மதிய நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இப்போது வானிலை மையம் நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது.
வெப்பம் உச்சம்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதேநேரம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவுகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கடலூர், நாகை, புதுச்சேரியில் 4 டிகிரி செல்சியல் வரை வெப்பம் இயல்பில் இருந்து உயர்ந்துள்ளது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களையும் வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை இருக்கு: அதேபோல ஏப்ரல் 23 மற்றும் 24 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், வரும் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை : இன்றும் (ஏப்ரல் 21) நாளையும் (ஏப்ரல் 22) தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38-39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது நேரடி வெயிலில் செல்வது முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல் நலப்பாதிப்பு உள்ளவர்களுக்கு வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாகச் சோர்வு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications