தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி.. எடப்பாடி பெயரை சொல்லாமல் மீண்டும் தவிர்த்த அமித்ஷா!
நெல்லை: எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா பேசி இருப்பது விவாதமாகி இருக்கிறது. அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்கான கூட்டணி என்று கூறிய அமித்ஷா, திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
நெல்லையில் தமிழக பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், 30 சட்டமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்களான அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், தமிழ் மண்ணை வணங்கி என்னுடைய உரையை தொடங்குகிறேன். புண்ணிய பூமியான தமிழ்நாட்டில் தமிழில் பேச முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தியுள்ளோம். அடுத்த மாநிலங்களவை கூட்டத்தில் சிபி ராதாகிருஷ்ணன் சபாநாயகராக இருப்பார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு 18 சதவிகித வாக்குகளும், அதிமுக கூட்டணிக்கு 21 சதவிகித வாக்குகளும் கிடைத்தது. இதன் மூலமாக 39 சதவிகித வாக்குகளை பாஜக - அதிமுக கூட்டணி வசம் இருக்கிறது. அதனால் 2026ல் தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக கூட்டணி ஆட்சி தான் அமையப் போகிறது. பாஜக - அதிமுக கூட்டணி வெறும் அரசியல் கூட்டணி மட்டும் அல்ல.
இந்த கூட்டணி நிச்சயமாக தமிழக மக்களை மேம்படுத்தும். திமுகவை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அமித்ஷா மீண்டும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டணி ஆட்சியே நடக்கும் என்பதை உறுதி செய்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நாள் முதலே அமித்ஷா, கூட்டணி ஆட்சி என்பதை தொடர்ந்து கூறி வருகிறார்.
அதேபோல் சில மாதங்களுக்கு முன்பாக அமித்ஷா கொடுத்த பேட்டி ஒன்றில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், அதிமுகவைச் சேர்ந்தவர் தான் முதல்வராக இருப்பார் என்று கூறி இருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியின் பெயரை குறிப்பிடவில்லை. தற்போது தமிழ்நாட்டில் மீண்டும் கூட்டணி ஆட்சி என்று கூறியதோடு, எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூறவில்லை.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக பாஜகவினர் உழைக்க வேண்டும் என்று பேசி இருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பாக, முதல்வரை பாஜக மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அண்ணாமலை கூறி இருந்தார். இதனால் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியின் பெயரை சொல்லாமல் தொடர்ந்து தவிர்த்து வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications