அன்புமணி வர்றாரு..ஓபிஎஸ் வர்றாரு! டிடிவியும் தான்! ரெடியாக ஆர்டர் போட்ட அமித்ஷா! எடப்பாடிக்கு பிரஷர்
சென்னை: எந்த விலை கொடுத்தாவது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என பாஜக உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் தனி அணியாக இருந்தால் ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்புமணி, பிரேமலதா, கிருஷ்ணசாமி என பல கட்சித் தலைவர்களையும் உள்ளடக்கிய மெகா என்டிஏ கூட்டணியை அமைக்க அமித்ஷா தயாராகி வருகிறார். அவர்களுக்கு பாதிக்கு பாதி சீட் கொடுக்க வேண்டுமென அமித்ஷா வலியுறுத்திருப்பதாகவும், அவரது தமிழக வருகையின் போது இது தொடர்பான பேச்சு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் சூழலில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணிக்கு இறுதி வடிவம் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் தீவிரமாக பரவி வருகின்றன.
சமீபத்தில் பிகார் தேர்தலில் பாஜக கூட்டணி பெற்ற வெற்றிக்கு பிறகு, அந்நிறுவனத்தின் முழு கவனம் தமிழகத்தின் மீது திரும்பியுள்ளது. இதைத் தான் பிரதமர் மோடியும் "பிகாரின் காற்று தமிழகத்திலும் வீசும்" என கூறி உற்சாகப்படுத்தியிருந்தார்.

2026 தேர்தல்
அதிமுகவில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான பிளவுகள் தற்போது கூட்டணி கணக்குகளை சிக்கலாக்கியுள்ளன. முதல் கட்டமாக ஓபிஎஸ் நீக்கம், அதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் நீக்கம் என்ற இரட்டை அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், அதிமுக வாக்குகள் பல்வேறு திசைகளில் சிதறக் கூடும் என்பதால், பாஜக மிகுந்த கவலையில் உள்ளது. வாக்குகள் சிதைந்தால் திமுகவிற்கு நேரடி நன்மை கிடைக்கும் என்பதால், அதிமுகவையும், அதனைச் சுற்றியுள்ள பிரிந்து சென்ற அணிகளையும் ஒருங்கிணைப்பது அவசியம் என்று பாஜக கருதுகிறது.
அமித்ஷா வருகை
இதற்காகவே அமித்ஷா ஒரு விரிவான கூட்டணி யோசனையை உருவாக்கியுள்ளார். ஓபிஎஸ்ஸை அவர் நேரடியாக சந்தித்தது, பாஜக அதிமுகவின் பிளவுகளை சமாளிக்கும் முயற்சி தான் என்பதை பாஜக வட்டாரங்கல் தெளிவுபடுத்தியுள்ளன. இதனால் எடப்பாடி பழனிசாமிக்கு சற்று அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஓபிஎஸ் தொடங்கவுள்ள புதிய கட்சியையும் என்.டி.ஏ கூட்டணியில் சேர்க்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த வேலைகள் முடிந்தவுடன், அமித்ஷா தமிழகத்துக்கு வருவார் என கூறப்படுகிறது.
பாஜக யூக்தி
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் தனித்தனியே போட்டியிட்டதால், திமுக பல இடங்களில் வெற்றி பெறக் காரணமாக இருந்தது. இரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகளை சேர்த்துப் பார்த்தால், திமுக பல இடங்களில் பின்னிலையில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக பாஜக கணித்து வருகிறது. அதனால், இந்த முறை திமுக எதிரான ஓட்டுகள் எந்தவிதமாகவும் சிதறக்கூடாது என்று திட்டமிட்டு, பல கட்சிகளை ஒருங்கிணைக்க பாஜக முயற்சிக்கிறது.
பாமக இணைவு
இந்நிலையில், அமித்ஷாவின் வருகையின் போது சில கட்களின் தலைவர்கள் கூட்டணியில் இணைவார்கள் என கூறப்படுகிறது. அதன்படி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமமுக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏசி சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சி பாரிவேந்தர் ஆகியோர் தான் அந்த பட்டியலில் உள்ளனர். ஏற்கனவே கூட்டணியில் தமாக ஜிகே வாசன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடிக்கு அழுத்தம்
இதனுடன், ஓபிஎஸ் அணியும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் (அமமுக) சேர்ந்துகொள்ள வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த அனைத்து அணிகளையும் ஒருங்கிணைத்து "மெகா என்.டி.ஏ" கூட்டணியை அமைக்க அமித்ஷா தீவிரமாக முயற்சி செய்கிறார். இத்திட்டத்தின் மையம் எடப்பாடி பழனிசாமி என்பதால், அமித்ஷாவின் அழுத்தத்தை அவர் ஏற்பாரா அல்லது புதிய மாற்றங்களை எதிர்ப்பாரா என்பது தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக உள்ளது. தமிழக வருகையின் போது மிகப்பெரிய எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அமித்ஷா இறுதியான முடிவை அறிவிப்பார் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications