கூட்டணி கதவை திறந்து வைத்த அமித்ஷா.. நான் பார்க்கவில்லை.. ஒரே வார்த்தையில் எடப்பாடி பழனிச்சாமி பதில்
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவின் கூட்டணி கதவுகள் அதிமுகவிற்காக திறந்துள்ளது என்று அமித்ஷா கூறியிருக்கும் நிலையில் அதனை தான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
லோக்சபா தேர்தலுக்கு பாஜக முழு வீச்சில் தயாராகி வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க பாஜகவில் வேட்பாளர்களை தயார் செய்ய ஆரம்பித்து விட்டது பாஜக. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விலகியது. இதனையடுத்து மீண்டும் அதிமுகவை தங்கள் அணிக்கு கொண்டு வர பாஜக பல கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.

யாரெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவர்களெல்லாம் பாஜக கூட்டணியில் சேரலாம் என்று கூறியுள்ளார் அண்ணாமலை. அதே நேரத்தில் அதிமுக தங்களது முடிவில் உறுதியாக இருந்து வருகிறது. இதனிடைய தற்போது பாஜக தங்கள் கூட்டணியை வலுப்படுத்த பாமக, தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழ்நாடு நாட்டின் முக்கியமான மாநிலம், அதற்கென தேர்தல் அறிக்கையில் நிறைய விஷயங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி முறிந்து விட்டது, 3வது அணி அமைக்க திட்டமா.? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமித்ஷா, கூட்டணிக்காக எல்லா கதவுகளும் திறந்துள்ளது. இது குறித்து ஆலோசித்து வருவதாக பதில் அளித்தார்.
அமித்ஷாவின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பாஜக உடன் கூட்டணி தொடர்பாக ஜி.கே. வாசன் பேசி வருகிறார். அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலரும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக கூறி வருகின்றனர். ஜெயக்குமாரும் இன்றைய தினம் உறுதியாகவே கூறி விட்டார்.
இதனிடையே அதிமுகவிற்காக கூட்டணி கதவு திறந்திருக்கிறது என்று அமித்ஷா சொன்னதன் மூலம் பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்று கமெண்ட் செய்துள்ளார் திமுகவின் ஆர்.எஸ். பாரதி. இதனிடையே பாஜக உடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாகவே இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இன்றைய தினம் செய்தியாளர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம், பாஜக கூட்டணி குறித்து அமித்ஷா கூறிய கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, அவர் என்ன கூறியுள்ளார் என்று நான் இன்னும் பார்க்கவில்லை என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார்.












Click it and Unblock the Notifications