செங்கோட்டையன் பாக்கெட்டில் அம்மா படம்.. செய்யுற வேலையை பாருங்க? சாடிய தினகரன்.. அமமுக ஆட்டம் ஆரம்பம்
சென்னை: தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று ஒரு வாரமே ஆகும் நிலையில், அதற்குள் அரசியல் களம் தகிக்கத் தொடங்கிவிட்டது.. மெஜாரிட்டி இல்லாத தவெக அரசு, பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சியைத் தக்கவைக்கப் பார்க்கிறது என்கிற பரபரப்பு குற்றச்சாட்டை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உடைத்துள்ளார்.. 'விஜய் இன்னும் சினிமா ரீல் உலகிலேயே இருக்கிறார், நிஜ ரியல் ஆட்சிக்கு வர வேண்டும்' என்று சாடியுள்ள தினகரன், அ.தி.மு.க.வை அழிக்க முதல்வர் விஜய் போடும் திட்டத்திற்கு மூத்த தலைவர் ஒருவர் ஏஜென்டாகச் செயல்படுகிறார் எனப் பெயரை குறிப்பிட்டு பொங்கியுள்ளார்..
செய்தியாளர்கள் சந்திப்பில் டி.டி.வி.தினகரன் பேசும்போது, தமிழக சட்டசபை தேர்தலில், 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும்பான்மை இல்லாமல், பல பகீரத முயற்சிகள் செய்துதான் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக மக்கள், மாற்றம் வேண்டும் என எண்ணி, வேட்பாளரே யார் என தெரியாமல் ஓட்டு போட்டுள்ளனர்.

தவெகவுக்கு மெஜாரிட்டி
இருந்தாலும் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை வழங்காமல், எதிர்க்கட்சிகளுக்கு 126 தொகுதிகளை வழங்கி, ஜனநாயகத்தை மக்கள் காப்பாற்றி உள்ளனர். தனிப்பெரும்பான்மை இல்லாததால், தவெக அரசு தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த ஒரு வார ஆட்சியை பற்றி உடனடியாக மதிப்பிட முடியாது. குறைந்தது மூன்று மாதங்கள் ஆகட்டும், அதன் பிறகு பார்க்கலாம்.
எம்.ஜி.ஆர். தொடங்கிய இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. எம்.ஜி.ஆர். காலத்திலேயே பல சோதனைகள் வந்துள்ளன. இருந்தாலும் அதிமுக அனைத்து சோதனைகளையும் கடந்து வந்துள்ளது. அதுபோல மீண்டும் எழும். தி.மு.க., அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைப்பது போன்ற சூழல் இல்லை. தி.மு.க.வுடன் இணைந்து ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி பேசவில்லை. சட்டப்படி எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர். அவரை அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்கள். பொதுச்செயலாளருக்கே அதிகாரம் உள்ளது.
த.வெ.க. ஆட்சியை அமைப்பதற்கு முன்பே, அ.ம.மு.க.வின் ஒரே சட்டமன்ற உறுப்பினரை த.வெ.க. தரப்பு தங்களிடம் இணைத்து கொண்டுள்ளது. எங்கள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றது அ.ம.மு.க., அ.தி.மு.க. கூட்டணி மற்றும் நிர்வாகிகளின் உழைப்பால் ஆகும். மக்கள் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்தனர். அவரே வந்து சேர்ந்ததாக வைத்துக்கொண்டாலும், அவரை உடனடியாக இணைத்துக்கொள்வது அரசியல் அறமா? எங்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசி ஏதோ வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
குதிரை பேரம் - காமராஜ்
இது, குதிரை பேரம் இல்லை என, விஜய் உள்ளிட்டோர் நம்புகிறார்கள்.. ஆனால், அமமுக எம்எல்ஏ காமராஜுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டால், நிச்சயமாக நாங்கள் சிபிஐ விசாரணை கேட்போம். காமராஜ் சி.பி.ஐ. விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்று விஜய்க்கு எச்சரிக்க விரும்புகிறேன்.
பாண்டிச்சேரியில் அவர் பல சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேசியதாக தகவல்கள் உள்ளன. அவர் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிகிறது. காமராஜ் கூறும் பல விஷயங்கள் பின்னர் அவருக்கே எதிராக திரும்பும்.
இதுபோல அதிமுகவை ஊழல் கட்சி என்றும், பா.ஜ.க. கூட்டணி என்றும் விமர்சித்த விஜய், இன்று அதே கட்சியின் 25 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்றுள்ளார். அவர்களுக்கு மனவருத்தங்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக த.வெ.க.வை ஆதரிப்பது அறம் என்று கூறுவது எப்படி நியாயமாகும்?
செங்கோட்டையன் மீது புகார்
ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்டும் என நினைப்பவர்கள், அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பது எந்த வகையில் நியாயம்? அ.தி.மு.க.வினருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டாலும், குதிரை பேரம் உறுதியாகும். ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, த.வெ.க.வுடன் இணைந்து அமைச்சர் ஆக முயற்சிப்பது அரசியல் ரீதியாக தவறான முடிவு. த.வெ.க.வை ஆதரிப்பதை அ.தி.மு.க. தொண்டர்களே ஏற்க மாட்டார்கள். அ.தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார் விஜய். அதற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இடம் கொடுக்க வேண்டாம்.
அதிருப்தி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிவதற்கு சமம். அ.தி.மு.க.வை அழிப்பதற்கு ஜெயலலிதாவின் படத்தை வைத்துக் கொண்டு செங்கோட்டையன் ஏஜென்டாக செயல்படுகிறார்.
அதிமுகவை அழிக்க துணை போகும் செங்கோட்டையனை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது. த.வெ.க.வை ஆதரித்த எம்.எல்.ஏ.க்கள் ரோட்டில்தான் நிற்க போகிறார்கள். பதவி வெறியால் ஒரு எம்.எல்.ஏ.வை கூட தூக்குகிறார்கள். அ.தி.மு.க.வில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது
ஊசலாட்டத்தில் தவெக ஆட்சி.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதை மக்கள் கவனித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெற்றி பெற்ற 5 தொகுதிகளில் மக்கள் நேரடியாக த.வெ.க.வுக்கே வாக்களிக்காமல், வேறு கூட்டணிக்கு வாக்களித்திருந்தனர். அப்படியிருக்க பிறகு தவெகவை ஆதரிப்பது அரசியல் நியாயமா? கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எவ்வளவு நாள் இந்த ஆட்சியை தாங்கி பிடிப்பார்கள்? 6 மாதமாவது நீடிக்குமா என்பது கேள்வி. இந்த ஆட்சியின் ஆயுட்காலமே தற்போது ஊசலாட்டத்தில் உள்ளது.
தூய்மையான ஆட்சி தருவோம் என்று கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த உடனே வழக்கமான அரசியலை தொடங்கி விட்டார்கள். முன்பு மற்ற கட்சிகளை விமர்சித்த அதே செயல்களில் தற்போது ஈடுபடுகிறார்கள். ஆட்சியை வெளிப்படையாக நடத்துவோம் என்று கூறியவர்கள், இன்னும் பல கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் உள்ளனர். சட்டமன்றத்தில் கேள்வி கேட்டால் வீட்டுக்கு சென்று அறிக்கை விடுவது சினிமா டயலாக் அல்ல. விஜய் ரீல் ஆட்சியில் இருந்து ரியல் ஆட்சிக்கு வர வேண்டும்.
ரீல் - ரீல்ஸ்
இந்த ஆட்சியில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ள சிலரை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன.
இன்றுகூட சமூக வலைதளங்களில் பல தகவல்களை பார்த்தேன். கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. சமூக வலைதளங்கள், இன்ஸ்டாகிராம், ரீல்ஸ் மூலம் ஆட்சி நடத்தலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஆட்சி என்பது ரீலில் நடத்தப்படுவதல்ல. நிஜ வாழ்க்கையில் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பதன் மூலம் நடத்தப்பட வேண்டியது. ரீல்களை பார்த்து நம்பி வாக்களித்த மக்கள், நிஜத்தில் ஆட்சியை பார்த்தபின் உண்மையை புரிந்துகொள்வார்கள்" என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.












Click it and Unblock the Notifications