“டிடிவி தினகரனிடம் பல முறை சொன்னேன்”.. அமமுகவில் இருந்து விலகியது ஏன்? - மாணிக்கராஜா பேட்டி
சென்னை: அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாணிக்கராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். "8 ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை பழைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டார் தினகரன். அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இடம்பெற்றதை தொண்டர்கள் ஏற்கவில்லை" எனத் தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்க மறுத்தவர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். இதனால், பாஜக - அதிமுக கூட்டணியில் இணைந்ததுமே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சில மாதங்களுக்கு முன்னர் டிடிவி தினகரன் அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசிய டிடிவி தினகரன், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இடம் பெறுவதாக அறிவித்தார். மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்திலும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் மீண்டும் அமமுக இணைந்ததற்கு அக்கட்சியில் எதிர்ப்பு எழுந்தது. பாஜகவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை அக்கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்குவதாக இன்று காலை அறிவித்தார்.
இந்நிலையில், சென்னையில் இன்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அதேபோல அமமுகவின் 3 மாவட்ட செயலாளர்களும் திமுகவில் இணைந்தனர். அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மாணிக்கராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.
மாணிக்கராஜா பேசுகையில், "நம் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்திருக்கிறோம். தற்போது 3 மாவட்ட செயலாளர்கள் வந்திருக்கிறார்கள். மேலும் பலர் வர உள்ளனர். டெல்லியில் இருந்து என்ன அழுத்தம் எனத் தெரியவில்லை. எங்களிடம் தினகரன் வெளிப்படையாகச் சொல்லவும் இல்லை. அமமுக எதற்கு ஆரம்பிக்கப்பட்டது என்ற நோக்கமே இல்லாமல் போய்விட்ட பிறகு அதில் தொடர்வதில் அர்த்தமில்லை என எங்கள் கட்சியினர் முடிவு எடுத்திருக்கிறார்கள்.
அதிமுக உடன் கூட்டணி வைக்க வேண்டாம் என பலமுறை டிடிவி தினகரனிடம் கூறினேன். அழுத்திச் சொல்லிப் பார்த்தும் என்னால் முடியவில்லை. நமக்கு ஆபத்தில் முடியும் எனச் சொன்னோம். அமமுகவை 8 ஆண்டு காலம் வளர்த்ததற்கு அர்த்தமின்றி போய்விட்டது. அதிமுக இடம்பெற்றுள்ள என்.டி.ஏ கூட்டணியில் இணைய வேண்டாம் என பலமுறை தெரிவித்தேன். 8 ஆண்டு கஷ்டப்பட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்குக் கொண்டு சென்றது அமமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications