"மோடி உங்களை புறக்கணித்துவிட்டாரே!" ஒரு நொடி கூட யோசிக்காமல் டிடிவி தினகரன் தந்த பதில்
சென்னை: நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன் (TTV Dhinakaran about NDA alliance) பல முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாகப் பிரதமர் மோடி உங்களைச் சந்திக்க மறுத்துவிட்டாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு முக்கிய விளக்கத்தைக் கொடுத்தார். மேலும், 2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "காமராஜர் பற்றி விமர்சனம் வரும்போது வெகு குண்டு எழு வேண்டிய காங்கிரஸ் கட்சியினர், எம்பி- எம்எல்ஏ சீட் வேண்டும் என்பதற்காக திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்பதே உண்மை. அவர்கள் காமராஜரை மறந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது.

திமுக மீது பாய்ச்சல்
மக்கள் ஸ்டாலின் உடன் இல்லை என்பதாலேயே உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். கற்பனையான திட்டம் போட்டு முயன்று பார்க்கிறார். தேர்தல் வாக்குறுதிகளைக் கூட நிறைவேற்றாத அவர், 200 தொகுதிகளில் வெல்வோம் என்கிறார்கள். திமுகவினர் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் தலைவர்களே திமுகவை விமர்சிக்கிறார்கள். எனவே, திமுக ஆட்சி முடிவுக்கு வருவது உறுதி.
தேர்தலுக்கு முன்பு அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 தருவோம் என்றது திமுக! ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு 3 ஆண்டுகள் எதுவுமே பேசவில்லை. எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்த பிறகே திட்டத்தை அறிவித்தார்கள். அதிலும் தகுதியுள்ள குடும்பத் தலைவிகள் என்றனர். குடும்பத் தலைவிகள் என்றாலே தகுதி தானே.. அதைத் தாண்டி என்ன தகுதி தேவை? இப்போது தேர்தல் நெருங்குவதால் அனைவருக்கும் தருவோம் என்கிறார்கள். மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வரவே திமுக முயல்கிறது" என்றார்.
பிரதமர் மோடியைச் சந்திக்காதது ஏன்!
பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்திருந்த போது அவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்திருந்தார். அதேநேரம் அவர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனைச் சந்திக்கவில்லை. இது அரசியல் அரங்கில் பேசுபொருள் ஆகியிருந்தது. இது தொடர்பான கேள்விக்கும் டிடிவி தினகரன், "நான் பிரதமர் மோடியைச் சந்திக்க நேரம் கேட்கவில்லை" என்று ஒரே வரியில் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்காகவும் நான் தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்வேன். என்னை அழைத்தால் நிச்சயம் பிரச்சாரம் செய்வேன். கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக இருக்கிறது. மாணவர்கள் வரை தவறான உணர்வு பெருகி, சட்ட ஒழுங்கு மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. இந்த ஆட்சி மாறினால் தான் எல்லாம் சரியாகும்" என்றார்.
ஓபிஎஸ் விவகாரம்
மேலும், ஓபிஎஸ் தொடர்பாகப் பேசிய டிடிவி தினகரன், "வரும் செப்டம்பர் 4ம் தேதி மதுரையில் ஓபிஎஸ் மாநாடு நடத்துகிறார். அந்த மாநாட்டில் நிச்சயம் நான் பங்கேற்பேன். இப்போதே ஓபிஎஸ் உடன் இணைந்து செயல்படுகிறோம். அதிமுகவில் என்னை இணைப்பது குறித்துக் கேட்டதற்குக் காலம் பதில் சொல்லும் என்கிறார் எடப்பாடி. உரிய நேரம் வரும் அப்போது காலம் பதில் சொல்லாது. நான் பதில் சொல்வேன்.
கூட்டணி ஆட்சி தான்
இன்னும் 6 மாதங்கள் மட்டும் பொறுத்திருங்கள்.. எல்லாமே நடக்கும். அடுத்தாண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் அமமுக போட்டியிடும். என்டிஏ கூட்டணியில் தான் நாங்கள் இருக்கிறோம். 2026ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் இருக்கும். அமித்ஷா என்ன கூறினாரோ? அதைத்தான் நானும் கூறுகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications