அதிமுகவுக்கு ‘டைவ்’ அடிக்கும் முக்கிய புள்ளி.. எடப்பாடியுடன் மீட்? சேதி கேட்டதும் அதிர்ந்த தினகரன்!
சென்னை : அமமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மனுமான சேகர் திடீரென அமமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்குப் பின்னணி என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகரித்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அண்மையில் பொதுச் செயலாளர் தேர்தல் நடந்தது.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் மாறி மாறி சட்டப் போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், நீதிமன்றங்களில் தனக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைத்ததால், அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காமல் இருந்து வந்த சூழலில் நேற்று தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து ஆணையிட்டது.
எடப்பாடி கை ஓங்கியது : தேர்தல் ஆணையத்தால் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் அரங்கில் அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதனால், அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமமுகவின் டெல்டா மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவர் அதிமுகவுக்கு தாவப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், அமமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சேகரை அமமுகவில் இருந்து நீக்கி டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவுக்கு தாவும் முக்கிய புள்ளி : அமமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி சேர்மனுமான மா.சேகர், அதிமுகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள் பலர், அந்தக் கட்சியிலிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் சமீபத்தில் அதிமுகவில் இணைந்தனர்.
அடுத்தடுத்து அதிர்ச்சி : கடந்த மாதம் அமமுக மாநில இளைஞரணிச் செயலாளராக இருந்த கோமல் ஆர்.கே.அன்பரசன், அமமுக தலைமை நிலையச் செயலாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ கே.கே.உமாதேவன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
அதைத் தொடர்ந்து அமமுக மாநில இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் டாக்டர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணனும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும், அமமுக அமைப்புச் செயலாளராகவும் முன்னாள் எம்.எல்.ஏவாகவும் இருந்த கே.கே.சிவசாமியும் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில், மேலும் ஒரு முக்கிய நிர்வாகி அதிமுகவுக்கு தாவும் தகவல் அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications