வேலூர், சேலம், கடலூருக்கு வரப்பிரசாதம்.. தமிழகத்தில் அசத்தும் அம்ருத் 2.0 திட்டம்.. மாஸ்டர் பிளான்
சென்னை: மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டம் குறித்து புது தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் இது தொடர்பான பணிகளும் ஆரம்பமாகியிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
சிறிய நகரங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காகவே மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டம்தான் அம்ரூத் எனப்படும் அடல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான திட்டமாகும்.

வீடுகள்: இந்தத் திட்டத்தில் நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளுக்கு குறைந்த செலவில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் சேவைகள், நீர்நிலைகளை சீரமைப்பது உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கடந்த 2022-ம் ஆண்டுகூட, தமிழகத்தில் 187 நீர் நிலைகளை புனரமைப்பு செய்ய ரூ.113.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நகர்ப்புற பகுதிகளில் முழுமையான நீர் ஆதார பாதுகாப்பினை உறுதி செய்வது, வீட்டுக் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவது. கழிவுநீர், கழிவு நீர் நிலைகளை புனரமைப்பது போன்ற நோக்கங்களை கொண்டு மத்திய, மாநில அரசுகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிதி பங்களிப்புகளுடன், இந்த அம்ரூத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புனரமைப்பு: அந்தவகையில், கடந்த நவம்பர் மாதம், அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் ரூ.929.37 கோடி மதிப்பீட்டில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டிருந்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.330.12 கோடி மதிப்பீட்டில் காரைக்குடி, ராஜபாளையம் நகராட்சிகள், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், திருச்சிராப்பள்ளி, தாம்பரம், கடலூர், ஈரோடு, ஆவடி மற்றும் திண்டுக்கல் மாநகராட்சிகளில், தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் 24x7 குடிநீர் வழங்கல் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் நிர்வாக அனுமதி வழங்கிஆணையிட்டிருந்தார்.
நிபந்தனை: அதுமட்டுமல்ல, இந்த திட்டத்தின் கீழ், நிதி பெற தேர்வு செய்யப்படும் நகரங்களுக்கு, முறையான முழுமை திட்டம் இருக்க வேண்டும் என்பது அடிப்படையாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாகப்பட்டினம், வேலூர், கடலூர், ராமேஸ்வரம், காஞ்சிபுரம், காரைக்குடி, தஞ்சை, ராஜபாளையம், புதுக்கோட்டை, நாகர்கோவில், கும்பகோணம், தூத்துக்குடி, ஆம்பூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திண்டுக்கல், சேலம் ஆகிய 17 நகரங்களுக்கு, முழுமை திட்டம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், ராஜபாளையம் நகரத்தின் முழுமை திட்டத்துக்கு மட்டுமே, அரசின் ஒப்புதல் கிடைத்திருக்கிறதாகவும், நாகப்பட்டினம், சேலம், வேலூர், திருநெல்வேலி நகரங்களின் முழுமை திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு சென்றுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
வீட்டு வசதி துறை: இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரிகள் தரப்பில் மேலும் சொல்லும்போது, "தமிழகத்தில் அம்ருத் திட்டத்தின் முதல் பகுதியில், 17 நகரங்களுக்கு முழுமை திட்டங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டதில், 12 நகரங்களின் திட்டங்கள் இறுதி கட்டத்தில் உள்ளன.
அம்ருத் 2.0 எனப்படும் 2-ம் பாக திட்டத்தில், 50,000 முதல், 99,000 வரையிலான மக்கள்தொகை உள்ள நகரங்களுக்கு புவிசார் அடிப்படையில், புதிய முழுமை திட்டங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
வேகப்பணிகள்: அதனடிப்படையில், 54 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டதில், 51 நகரங்களுக்கான முழுமை திட்டம் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதற்கு முதல் தவணையாக, 9.87 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரங்களில், அடுத்த 20 வருடத்தில் ஏற்படும் மக்கள்தொகை பெருக்கம், வாகன பெருக்கம், தொழில் முன்னேற்றம் போன்றவற்றின் மதிப்பீடுகள் சேர்க்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் நில பயன்பாட்டுக்கான வகைப்பாடுகள் வரையறுக்கப்படும்" என்றனர்.












Click it and Unblock the Notifications