முட்டுக்காட்டில் சர்வதேச தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்.. இனி பிஸியாகும் சென்னை ஈசிஆர் சாலை
சென்னை: கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும் என்று கூறியுள்ளார். சட்டசபையில் இன்று 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை பெருநகரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தங்கம் தென்னரசு தனது அறிவிப்பில், இந்தியாவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கடைக்கோடி தமிழர்களும் எளிதில் அணுகக்கூடிய ஒப்பற்ற தலைவராக உள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வளர்ச்சிப்பாதையில் தமிழ்நாடு வெற்றிநடை போட்டு வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல்மிக்க ஆர்.கே. சாலை, புதிய ஆவடி சாலை, பேப்பர் மில் சாலை உள்ளிட்டவை ரூ. 300 கோடியில் அகலப்படுதப்படும்.
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வட சென்னையில் கட்டமைப்பை மேம்படுத்த வட சென்னை வளர்ச்சி திட்டம்' ரூ. 1000 கோடியில் மேற்கொள்ளப்படும்
சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ. 100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும். பூவிருந்தவல்லி அருகே அரசு தனியார் பங்களிப்புடன் புதிய, நவீன திரைப்பட நகரம் அமைக்கப்படும். நகர்ப்புறங்களில் 4,448 கி.மீ. சாலைகளை சீரமைக்க ரூ. 2500 கோடி நிதி ஒதுக்கப்படும்.
ரூ. 1500 கோடியில் அடையாறை மீட்டெடுக்க புதிய திட்டம் வகுக்கப்படும். அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளிட்டவை சீரமைக்கப்படும். சென்னை உட்பட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க நகர்புற பசுமை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
கடந்த ஆண்டு கிழக்குக் கடற்கரை சாலையில் ஏ.ஆர். ரகுமான் இசைக்கச்சேரி நடைபெற்ற போது பெரும் குழப்பம் ஏற்பட்டது. சரியான முன்னேற்பாடுகள் செய்யப்படாத காரணத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து கடந்த ஜூன் 2ஆம் தேதி நடைபெற்ற கருணாநிதி நூற்றாண்டு விழா இலச்சினை வெளியீட்டு விழாவில்பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை நந்தம்பாக்கத்தில் வர்த்தக மையம் அமைந்திருந்தாலும், வளர்ந்து வரும் தேவைக்கும், எதிர்காலத் தேவைக்கும் போதுமானதாக இல்லை. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு, கலைஞர் Convention Centre' சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 5 ஆயிரம் பேர் அமரக்கூடிய - உலகத்தரத்திலான மாநாட்டு அரங்கம், மிக பிரம்மாண்டமாக உலகத் தரத்தில் சென்னையில் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக, போக்குவரத்து நெரிசல் இல்லாத பகுதியில் இடம் தேடும் பணியில் தமிழக அரசு அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இ்ந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை சார்பில், சென்னைகிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு கிராமத்துக்குட்பட்ட 34 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த இடத்தில் ஓராண்டில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுதிறக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்றைய தினம் சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் பன்னாட்டு அரங்கம் கட்டப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications