வேளச்சேரியில் அரசு நிலம் என தெரியாமல் ரூ.1 கோடி கொடுத்து வாங்கி ஏமாந்த முதியவர்.. கடைசியில் ட்விஸ்ட்
சென்னை: சென்னை வேளச்சேரியில் அரசு நிலம் என தெரியாமல் ரூ.1 கோடி கொடுத்து முதியவர் ஒருவர் வாங்கி உள்ளார். அந்த நிலத்தில் இருந்த வேலியை அகற்றியபோது அரசு நிலத்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை நிலம் வாங்க போகிறீர்கள் என்றால், பத்திர ஆபிஸில் உள்ள தகவல்களை மட்டும் பார்க்காமல் கிராம நிர்வாக அலுவலகங்களில் போய் அந்த நிலம் எப்படிப்பட்டது. அரசு நிலமா, நிலத்தின் வகை என்ன, நிலம் அனாதீன நிலமா? கிராம நத்தம் நிலமா, நஞ்சை நிலமா, புன்செய் நிலமா அல்லது அரசு தானமாக வழங்கிய நிலமா, நீர் நிலை புறம்போக்கா அல்லது நீர் வழித்தடமா, அல்லது பாதைக்காக விடப்பட்ட நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்களா என்பதை கவனமாக பார்க்க வேண்டும்.

அதேபோல் நிலத்தின் பெயரில் வில்லங்கம் உள்ளதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே நிலம் வாங்கியவரின் பெயரில் பட்டா உள்ளதா என்பதை ஆன்லைனில் உறுதி செய்து கொள்ள வேண்டும். இறுதியாக வழக்கறிஞர்களிடம் சட்ட ஆலோசனை பெற்று வாங்க வேண்டும்.. இல்லாவிட்டால் பெரும் சிக்கலை சந்திக்க நேரிடும். ஏனெனில் சென்னையில் பல இடங்கள் நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. போலி ஆவணங்கள் கொடுத்து பட்டா வாங்கி பயன்படுத்து நடக்கிறது.. எனவே அரசு அந்த நிலங்களை எல்லாம் அதிரடியாக மீட்டு வருகிறது.
இந்நிலையில் முதியவர் ஒருவர் சென்னை வேளச்சேரியில் அரசு நிலம் என தெரியாமல் ரூ.1 கோடி கொடுத்து வாங்கி ஏமாந்துள்ளார்.. இதுபற்றி விவரங்களை பார்ப்போம். சென்னை வேளச்சேரி வி.ஜி.பி., செல்வா நகரில் 1973-ம் ஆண்டு வீட்டுமனை உருவாக்கப்பட்டது. அப்போது சமூகநலக்கூடம் கட்ட 35 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த இடத்தின் மதிப்பு ரூ.15 கோடியாகும். அந்த இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து போலி ஆவணங்கள் வாயிலாக பட்டா வாங்கியிருக்கிறார்கள்.. இது தொடர்பான வழக்கு கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் 2022-ம் ஆண்டு, தனிநபருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து, மாநகராட்சி பெயரில் பட்டா வழங்கப்பட்டது. அந்த இடத்தில் ரூ.6.97 கோடியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமண மண்டபம் கட்ட மாநகராட்சி சார்பில் கடந்த மாதம் பூமி பூஜையும் நடந்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான அந்த இடத்தில் குப்பை, கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் அதனை தடுக்க சவுக்கு மரத்தால் நிலத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் சவுக்கு மரக்கட்டையால் ஆன வேலிகளை அகற்றி மீண்டும் இடத்தை ஆக்கிரமிக்க முயற்சி நடப்பதாக சென்னை மாநகராட்சி தாசில்தார் சரோஜா, வேளச்சேரி போலீசில் புகார் கொடுத்தார். உடனே போலீசார் விரைந்து சென்று வேலியை அகற்ற பயன்படுத்திய பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்தார்கள்
இது தொடர்பாக பொக்லைன் எந்திரம் டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த சாமிக்கண்ணு(வயது 32), அந்த இடத்தை சொந்தம் கொண்டாடிய ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பெர்னான்டோ(82) ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், அந்த நிலம் தொடர்பாக வழக்கு நடந்து வந்தபோதே 2016-ம் ஆண்டு வேளச்சேரியை மர்மநபர்கள் சிலர், பெர்னான்டோவிடம் ரூ.1 கோடி வாங்கிக்கொண்டு அந்த சிலத்தை விற்று மோசடி செய்திருக்கிறார்கள்.
அரசு நிலம் என தெரியாமல் பணத்தை கொடுத்து ஏமாந்த பெர்னான்டோ, தற்போது அந்த நிலத்தில் இருந்த வேலியை அகற்றியபோது, அரசு நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 82 வயது முதியவர் பொது சொத்தை சேதப்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். இதனிடையே வயதான முதியவரை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications