நோட்ஸ் எடுத்துட்டு வந்து திருட்டு.. மயக்கமா வருது.. எஸ்கேப்பாக முயன்ற பாட்டியை மடக்கிய மக்கள்
சென்னை: திருட்டுகளில் பலவிதம் உள்ளது. ஆனால், சென்னை மாங்காடு அருகே நடந்த திருட்டு சம்பவம் பகீர் ரகம். வீட்டில் ஆட்கள் இருந்த நிலையில் கொஞ்சமும் அச்சமின்றி சர்வ சாதாரணமாக வீட்டுக்குள் புகுந்து நகையைத் திருடிவிட்டு எஸ்கேப்பாக முயற்சி செய்த மூதாட்டியை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நம் சமூகத்தில் டிஸைன், டிஸைனாக ஏராளமான திருட்டுச் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. ஆன்லைன், ஆஃப்லைன் என்று பல ரூட்களில் திருடுவது வாடிக்கையாகி விட்டது. கோழி திருட்டு, சைக்கிள் திருட்டு, ஆடு திருட்டு, பல்பு திருட்டு, புல்லட் திருட்டு என்று பல நூதான திருட்டுச் சம்பவங்கள் குறித்து கேள்விப்பட்டிருப்போம். அதையெல்லாம் மீறி, யாரும் எதிர்பாராத ஒரு நூதன திருட்டு சம்பவத்தால் சென்னை மாங்காடு பகுதியே அதிர்ந்து போயுள்ளது.

சென்னை மாங்காடு அருகே உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, அப்பெண்ணின் வீட்டுக்குள் மூதாட்டி ஒருவர் சர்வ சாதாரணமாக வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அப்போது, நாமளும் இந்த வீட்டு ஆள்தான் என்பதுபோல் அப்படியே நோட்டம் விட்ட பாட்டி, நகை வைத்திருக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளார். பின்னர், வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த நகையை திருடிக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.
வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த வீட்டின் பெண்மணி மூதாட்டி ஒருவர் வீட்டுக்குள் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அப்பெண் பயங்கரமாக கூச்சலிட்டுள்ளார். பெண்ணின் கூச்சல் சப்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களது வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தபோது, உஷாரான மூதாட்டி அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில் பொதுமக்கள் மூதாட்டியை மடக்கிப் பிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, அவர்கள் மூதாட்டியை சோதனை செய்ததில் 4 பவுன் நகை மற்றும் சில்லறை காசுகளை அவர் தனது கைப்பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தின் ஹைலைட்டாக மூதாட்டி வைத்திருந்த கைப்பையில் எந்தெந்த வீடுகளில் திருட வேண்டும் என்று எழுதப்பட்ட முகவரியுடன் வந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததும் உஷாரான மூதாட்டி மயக்கமடைவதைப் போல நடித்துள்ளார். இதையடுத்து, காவல் துறையினரிடம் போலீஸார் மூதாட்டியை ஒப்படைத்தனர். பட்டப்பகலில் வீட்டுக்குள் ஆள் நடமாட்டம் இருக்கும் நிலையில் சர்வ சாதாரணமாக நுழைந்து மூதாட்டி நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத்தொடர்ந்து, பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பெண்கள் சமையலறையில் வேலை செய்யும்போது வீட்டின் கதவை கட்டாயம் தாழிட்டுவிட்டு வேலை செய்ய வேண்டும். நகைகள் போன்றவற்றை பத்திரமான இடங்களில் வைக்க வேண்டும். அடையாளம் தெரியாத நபர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிக்க வேண்டும்.
பொருள்கள் விற்பனை செய்ய வருவோர், தண்ணீர் மற்றும் நிதியுதவி கேட்டு வருவோர், அனாதை ஆசிரமத்தில் இருந்து வருகிறோம் என்று கூறுபவர்கள் போன்றவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications