ரூ.1,000 உதவித்தொகை என்ன செய்யும்?.. மேடையில் வைராக்கியமாக பேசிய மாணவி.. கண்கலங்கிய அன்பில் மகேஷ்
சென்னை: புதுமைப் பெண் திட்டம் மூலம் தனக்கு மாதம்தோறும் வரும் ரூ.1000 மூலமாகத் தான் கல்விச் செலவுகளைச் சமாளிப்பதாகவும், தன்னுடைய அம்மாவுக்கு காது கேட்கும் கருவியை வாங்கியதாகவும் கூறிய மாணவி, நான் படித்து மேலும் உயர்ந்த நிலைக்குச் செல்வேன், என் பெற்றோரை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று வைராக்கியமாக பேசியது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது. மாணவி பேச பேச அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீர் விட்டு அழுதார்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த், அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவில் உள்ள முற்போக்கு இயக்குநர்களும் கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்கள். இயக்குநர்கள் வெற்றிமாறன், தியாகராஜன் குமாரராஜா, தமிழரசன் பச்சை முத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், புதுமைப் பெண் திட்டத்தால் பலனடைந்த திருச்சி அரசுப் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் ரம்யா என்ற மாணவி பேசியதாவது: என்னைப் பொருத்தவரை என் வாழ்க்கையில் நான் மேலே ஏறி வந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். நான் நினைக்காத எல்லா விஷயங்களும் நடந்து கொண்டிருக்கிறது. உங்கள் எல்லோருக்கம் நன்றி. நான் தஞ்சாவூர் மாவட்டம், கோவிலடி கிராமத்தில் இருந்து வருகிறேன்.
நான் திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கிறேன். என் அப்பா கூலி விவசாயி. அவரால் என்னை உயர்கல்வி படிக்க வைக்க முடியவில்லை. அந்த நேரத்தில் வேலைக்குச் சென்றேன். அப்போது கொஞ்சம் பணத்தை சேமித்து வைத்திருந்தேன். திடீரென எனது ஆசிரியர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து கல்விக் கட்டணம் தானே கட்டிக் கொள்ளலாம். கல்லூரியில் சேர்த்து விடுங்கள் என்று கூறினார்.
என்னை கல்லூரியில் சேர்த்துவிட்டு, கட்டணத்தையும் கட்டினர். மற்ற எல்லா செலவுகளையும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை திட்டம் மூலமாகத்தான் நான் செய்து கொள்கிறேன். எனக்கு என்ன தேவையோ அவை அனைத்தையும் வாங்கிக் கொள்கிறேன். அப்பா, அம்மாவை எந்த இடத்திலும் தலைகுனிய வைக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால், பல இடங்களில் என் அப்பா, அம்மா கஷ்டப்படுவதை நான் பார்த்துள்ளேன்.
எனது அம்மாவுக்கு காது கேட்காது. அதனால், எதற்கு பிள்ளையை படிக்க வைக்கிற என்று கேட்பார்கள். வயசான காலத்தில் எதுக்கு இது என்று கேட்பார்கள். நான் ரொம்ப லேட்டாகத்தான் பிறந்தேன். அது என் தப்பு இல்ல இல்லை. இவை எல்லாவற்றையுமே மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். இந்தத் திட்டத்தின் மூலம் மாதம்தோறும் கிடைக்கும் பணத்தில் 100 ரூபாயை சேமித்து வைத்து என் அம்மாவுக்கு போன மாதம் காது கேட்கும் கருவியை வாங்கிக் கொடுத்துள்ளேன். அந்த கருவி மூலமாக நான் பேசுவதை என் அம்மா கேட்டுக் கொண்டிருக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் கண்டிப்பாக நன்றாகப் படித்து என் அம்மாவுக்கு காது கேட்பதற்கான அறுவை சிகிச்சையை செய்வேன்.
அப்பாவுக்கு சில உடல்நலக் கோளாறுகள் உள்ளது. அதற்காக நிறைய கடன் வாங்கியுள்ளனர். அந்தக் கடன்களையும் நான் தான் இப்போது அடைத்துக் கொண்டிருக்கிறேன். நான் நன்றாகப் படித்து என் அப்பா, அம்மாவை காப்பாற்றுவேன். அவர்களை எந்த இடத்திலும் நான் இழக்க மாட்டேன் என்று கூறினார். மாணவி ரம்யாவின் பேச்சைக் கேட்டு அவர்கள் பெற்றோர் கண் கலங்கிய சம்பவம் காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
மேலும் அந்த மாணவி பேசுகையில், என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்த ஒரு விஷயம். என் அம்மாவை நிறைய பேர் காயப்படுத்தி பேசியதை நான் பார்த்திருக்கிறேன். இந்த இடத்தில் சொல்கிறேன் என் அம்மாவை காயப்படுத்தியதாலோ என்னவோ தெரியவில்லை. என் அம்மாவுக்கு நான் காது கேட்கும் கருவியை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
நீங்கள் மேலும் மேலும் என்னைப் பேசினால் தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மேலும் தோன்றும். என் அப்பாவின் மேல் இருக்கும் கடன்களை எல்லாம் நான் அடைப்பேன். நான் இன்னும் நிறைய நிறைய படித்து அவர்களைக் காப்பாற்றுவேன். என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதற்கு நன்றி முதல்வர் சார் என்று கூறினார். மாணவி பேச பேச பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீர் விட்டு அழுதார்.












Click it and Unblock the Notifications