இனி அதிகார மையம் தைலாபுரம் இல்லை.. கட்சி அலுவலக முகவரியையே மாற்றிய அன்புமணி ராமதாஸ்!
சென்னை: இதுநாள் வரை பாமகவின் அலுவலக முகவரிவாக தேனாம்பேட்டை என்று இருந்து வந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பாமக அலுவலகத்தின் முகவரி மாற்றப்பட்டுள்ளது.
தைலாபுரம் என்பது தமிழக அரசியல் களத்தின் முக்கியமான முகவரிகளுள் ஒன்று. தேர்தல் சமயங்களில் இரு பெரும் திராவிடக் கட்சிகளும் தைலாபுரத்துக்கு தூது அனுப்பிய காட்சிகள் ஏராளம். வட மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் பாமக, தேர்தல் கூட்டணிகளில் பெரும் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்திருக்கிறது.

தைலாபுரம் தோட்டம்
தைலாபுரத்தில் இருந்து வெளியாகும் பாமக நிறுவனர் ராமதாஸின் அறிக்கைகள் ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களுக்கு நோட்ஸாக இருந்திருக்கின்றன. என்ன பிரச்சனை என்றாலும் நாள் தவறாமல் ராமதாஸின் அறிக்கைகள் வெளிவரும். போயஸ் தோட்டம், தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயம் போல, தமிழக அரசியலின் முக்கியமான மையமாக திகழ்ந்தது தைலாபுரம் என்றால் மிகையில்லை.
இந்நிலையில் தான் இன்று பாமகவின் தலைமையக முகவரியாக சென்னை தியாகராய நகரில் இருக்கும் தனது இல்லத்தின் முகவரியை சேர்த்திருக்கிறார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். முன்பு தேனாம்பேட்டையில் இருந்த அலுவலக முகவரிக்கு பதிலாக, தி.நகர் திலக் நகர் தெருவில் உள்ள புதிய முகவரி உறுப்பினர் படிவத்தில் அச்சிடப்பட்டுள்ளது.
அன்புமணி - ராமதாஸ் மோதல்
பாமகவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இருவரும் கடுமையாக கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது, பாமகவில் அன்புமணி தரப்பு என்றும் ராமதாஸ் தரப்பு என்றும் இரு பிரிவுகள் உருவாகியுள்ளன.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நேற்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்றும் விமர்சித்திருந்தார். பாமகவில் இளைஞர் அணித் தலைவர் பதவிக்கு முகுந்தனை நியமிக்கும் விவகாரத்தில் தாயார் மீது பாட்டில் வீசித் தாக்கினார் அன்புமணி. பாஜகவுடனான கூட்டணிக்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டி இருந்தார்.
அன்புமணி ஆலோசனை
இந்நிலையில், இன்று சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் பாமக தலைவர் அன்புமணி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பாமக நிறுவனர் ராமதாஸ் நீக்கிய மாவட்டச் செயலாளரை மேடைக்கு அழைத்து, "நீங்கள் தான் மாவட்டச் செயலாளர்" என உறுதி அளித்தார். முன்னதாக பாமக பொருளாளர் பொறுப்பில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸால் நீக்கப்பட்ட திலகபாமாவையும் அன்புமணி மீண்டும் நியமித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், "என்னைக் கட்சித் தலைவராக நீங்கள் தேர்வு செய்த நாளிலிருந்து மன உளைச்சல்தான். நேற்று தான் விடுதலை கிடைத்தது. இனி நாம் வேகமாக செல்லலாம். பல பழிகளை என் மீது சுமத்தினார்கள். அவை என்னை மேலும் மேலும் வலுப்படுத்தின. 2019ல் அன்புமணி முதலமைச்சர் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்க வேண்டும். என்னிடம் எத்தனையோ திட்டங்கள் உள்ளன. அதற்கான சுதந்திரம் உள்ளது.
யாரும் நீக்க முடியாது
பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சித் தலைவர் தான் நிர்வாகிகளை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். எனவே, யார் நீக்கப்பட்டாலும் கவலை வேண்டாம். அடுத்த நிமிடமே நியமனக் கடிதம் அனுப்புவேன். திலகபாமாவை நீக்க யாருக்கும் அதிகாரமில்லை. பொதுக்குழுவால் மட்டுமே நீக்க முடியும். அதுதான் நம் கட்சியின் விதி. நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக எனது கடிதம் மட்டுமே செல்லும்.
எந்தத் தடைகள் வந்தாலும், நாம் உடைத்து முன்னேறுவோம். அதேநேரத்தில் நம்முடைய சமூக நீதிப் போராளி ராமதாஸின் கொள்கைகளை நாம் கடைப்பிடிப்போம். அடுத்து வருகின்ற தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெற வேண்டும். நம்முடைய ஆட்சி தமிழ்நாட்டில் நடக்க வேண்டும். அதற்கு எவ்வளவோ திட்டங்கள் என்னிடம் இருக்கின்றன. இப்போது அதைச் செயல்படுத்துவதற்கு எனக்குச் சுதந்திரமும் இருக்கிறது." எனப் பேசியுள்ளார்.
முகவரி மாற்றம்
மேலும், பாமக அலுவலக முகவரியை அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார். அன்புமணி ராமதாஸ் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிட்ட புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பாமக அலுவலகத்தின் முகவரி மாற்றப்பட்டுள்ளது. சென்னை, தி.நகர் தெருவில் உள்ள தனது வீட்டின் முகவரியை கட்சி அலுவலக முகவரியாக அன்புமணி ராமதாஸ் மாற்றியுள்ளார்.












Click it and Unblock the Notifications