சாதிவாரி கணக்கெடுப்பு.. வன்னியர் உள் ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்க வேண்டாம் - அன்புமணி
சென்னை: வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்க வேண்டாம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு செல்லாது என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியிருந்தது. மேலும் உள் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும், உள் இட ஒதுக்கீடு வழங்கும்போது, அதற்கான சரியான, நியாயமான காரணங்களை அரசு கொடுக்க வேண்டும்'' என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒரே வாரத்திலேயே பெற்றுத் தர முடியும் என ராமதாஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு தேர்தல் அறிவிப்புக்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட்டது. வன்னியர் உள் இட ஒதுக்கீடு ரத்தானதுக்கு, அ.தி.மு.க-வின் அவசரகதியே காரணம். இதனால்தான் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கின்றன.
வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆணித்தரமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழக அரசு தரவுகளைக்கொண்டு வாதாடியதை உச்ச நீதிமன்றமே பாராட்டியது. இந்தச் சிறப்பு உள் இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை சட்ட வல்லநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி நிச்சயமாக சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்குகிறது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ்; வன்னியர் இட ஒதுக்கீட்டை சாதி பிரச்சினையாக பார்க்க கூடாது, சமூக நீதி பிரச்சினையாக பார்க்க வேண்டும். கல்வியில் கடந்த 30 ஆண்டுகளாக வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளது. நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தொடரில் 10.5% இட ஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற, முதல்வரை சந்தித்து வலியுறுத்தினோம். இது குறித்து ஆலோசித்து விட்டு கூறுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால்தான் இடஒதுக்கீட்டை பாதுகாக்க முடியும் என்றும் கூறினார் அன்புமணி ராமதாஸ். தமிழக அரசு மனது வைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். தமிழ்நாட்டில் 22 மாவட்டங்கள் காவிரி நீரை நம்பிதான் உள்ளன எனவும் கூறினார்.












Click it and Unblock the Notifications