’ஆன்லைன் ரம்மி’ மேலும் ஒரு பலி! தொடர்சாவுகளை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் கேள்வி
சென்னை : ஆன்லைன் ரம்மிக்கு சென்னை அம்பத்தூரில் மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தொடர் சாவுகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா தமிழக அரசு? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்ற அறியாமையில் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி மன நோயாளிகளாக மாறி தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.
ஆன்லைன் ரம்மி, ட்ரேடிங்க் ஆப்கள் தான் இந்த அவலநிலைக்கு காரணம். இதனையடுத்து எழுந்த எதிர்ப்புகள் மற்றும் கோரிக்கைகளால் தடை கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த தடை மீண்டும் விலக்கப்பட்டது.

காவலர் தற்கொலை
இந்நிலையில் ஆன்லைன் ரம்மிக்கு சென்னை அம்பத்தூரில் மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தொடர் சாவுகளை வேடிக்கைப் பார்க்கப் போகிறதா தமிழக அரசு? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் ட்விட்டர்
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அன்புமணி ராமதாஸ், " சென்னை அம்பத்தூரில் மத்திய அரசு அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

தற்கொலை 20 தற்கொலை
காவலர் சரவணக்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானதாகவும், அதில் பெரும்பணத்தை இழந்து லட்சக்கணக்கில் கடனாளியானதாகவும், அதிலிருந்து மீள முடியாமல் தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இதை விட பெருங்கொடுமை இருக்க முடியாது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, கடந்த 9 மாதங்களில் 20-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தடை செய்ய வேண்டும்
ஒவ்வொரு உயிரிழப்பும் மனதை கலங்கச் செய்கிறது. ஆனால், அரசோ கலங்காமல் வேடிக்கை பார்க்கிறது! தமிழ்நாட்டில் இனியும் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு உயிரிழக்கக்கூடாது. அவ்வாறு நடந்தால் அது திமுக அரசுக்குத் தான் தீராப்பழியை ஏற்படுத்தும். எனவே, இனியும் மேல்முறையீட்டை நம்பிக்கொண்டிருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்!" என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications