அன்புமணி பயணத்திற்கு ராமதாஸால் வந்த சிக்கல்.. அனுமதி மறுப்பு? நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல்!
சென்னை: அன்புமணி ராமதாஸின் நடை பயணத்துக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அன்புமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக மக்கள் உரிமை மீட்பு எனும் தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்ளும் நடைபயணம் திருப்போரூரில் நேற்று தொடங்கியது.

பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும், மாறி மாறி நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்து வந்தனர். இருவரும் தனித்தனியாக பாமக நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25 ஆம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கப்போவதாகவும், 100 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் நடைபெறும் என்றும் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருந்தார். இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால் தடை விதிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்தார்.
எனினும் திட்டமிட்டபடி நடைபயணத்துக்கான 'உரிமை மீட்க... தலைமுறை காக்க' என்ற இலச்சினையையும், ' உரிமைப் பயணம் ' என்ற தலைப்பில் பிரச்சார பாடலையும் அன்புமணி வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி, "ராமதாஸின் வழியில் அவரது கனவுகளை நிறைவேற்றவே நடைபயணம் மேற்கொள்கிறேன். மக்களுக்கு உரிமை தராத திமுக அரசை இந்த நடைபயணம் வீட்டுக்கு அனுப்பும். 10 உரிமைகளை முன்வைத்து நடைபயணம் மேற்கொள்கிறேன்.
ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கால்ஷீட் கொடுத்து, ஆக்ஷன் என்றதும் முதல்வர் நடிக்கிறார். பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்தால் உரிமை கிடைக்குமா? அது டாஸ்மாக்குக்குச் செல்கிறது. வேளாண் துறையில் வளர்ச்சி மைனஸ் 0.12 சதவீதமாக இருப்பது வெட்கக்கேடானது. சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சமூக நீதியை உருவாக்குவோம்." என்றார்.
இதற்கிடையே அன்புமணியின் சுற்றுப்பயணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்து, கட்சியின் பெயர் மற்றும் கொடியை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து, அன்புமணியின் நடைபயணத்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நடைபயணத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில், அன்புமணி ராமதாஸ் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி ராமதாஸ், திட்டமிட்டபடி திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கியிருந்தாலும், காவல்துறையின் அனுமதி மறுப்பு மற்றும் தடை உத்தரவு காரணமாக, அவர் அடுத்தடுத்து செல்லும் இடங்களுக்கு தடை விதிக்கப்படும். இதனால் சட்டரீதியாக முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.
அன்புமணியின் நடைபயணத்திற்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரம் பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான உட்கட்சி மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications