3719 பார்களை மூட ஹைகோர்ட் அதிரடி உத்தரவு- தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் 3719 டாஸ்மாக் மது கடைகளில் உள்ள பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள 3,719 குடிப்பகங்களை உடனடியாக மூட வேண்டும்; மீதமுள்ள குடிப்பகங்களை அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை மதுக்குடிப்பகங்களை நடத்துவதற்கான உரிமங்களைப் பெற்றவர்கள், கொரோனா காலத்தில் மதுக்குடிப்பகங்களை நடத்த முடியவில்லை என்பதால், உரிமக் காலத்தை நீட்டித்து வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை தள்ளுபடி செய்த நீதியரசர் சரவணன், குடிப்பகங்களை நடத்த டாஸ்மாக்குக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதியின் கேள்வி
''1937-ஆம் ஆண்டின் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் மதுக்கடைகளுக்கு அருகில் உள்ள இடங்களில் மது விற்கப்படுவதையோ, பார் என்ற பெயரில் அங்கு நொறுக்குத் தீனிகளை விற்கவும், மதுப்புட்டிகளை வாங்கவும் தனியாருக்கு உரிமம் வழங்குவதையோ அனுமதிக்கவில்லை. மதுவிலக்கு சட்டத்தின் 4ஏ பிரிவின்படி ஒருவர் மது போதையில் பொது இடங்களில் நடமாடினால் அவருக்கு 3 மாதம் வரை சிறை அல்லது ரூ.1000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க முடியும். குடிப்பகங்கள் பொது இடம் இல்லை என்றாலும், அங்கு குடித்து விட்டு வீட்டுக்கு செல்லும் ஒருவர், பல பொது இடங்களை கடந்து தான் செல்ல வேண்டும். அப்படியானால், மதுவிலக்கு சட்டத்தின்படி குற்றமாக அறிவிக்கப்பட்ட ஒரு செயலை செய்ய துணைபோகும் குடிப்பகங்களை எவ்வாறு அனுமதிக்க முடியும்?'' என்று நீதியரசர் சரவணன் வினா எழுப்பியுள்ளார். அவரது ஞானமும், சமூகத்தின் மீதான அக்கறையும் பாராட்டத்தக்கவை.

சமூக சீரழிவு
திருவள்ளுவரின் பெருமையையும், திருக்குறளின் சிறப்பையும் போற்றும் தமிழ்நாடு, அவர் போதித்த கள்ளுண்ணாமை குறித்த அறிவுரைகளை மட்டும் காற்றில் பறக்க விடுவது தான் வேடிக்கையாகும். தமிழ்நாட்டில் இன்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் செய்யப்படுவதை விட மது வணிகம் சார்ந்த விஷயங்களில் தான் அதிக சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. ஆனால், அந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் சமூக சீரழிவுக்கு வழிவகுப்பவை என்பது தான் மிகவும் வேதனையாகும்.

மது வணிகம் அவமானம்
புதிய கல்வி நிலையங்களையும், வேலைவாய்ப்புகளையும் ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டாத அரசு, நடப்பாண்டில் 1551 புதிய குடிப்பகங்களை திறந்திருக்கிறது. அதன்மூலம் அரசுக்கும், தங்களுக்குமான வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறைகளை நிர்வகிப்பவர்கள் துடிப்பது தான் இதற்குக் காரணம் ஆகும். மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை முதன்மை வருவாய் ஆதாரமாக ஓர் அரசு நம்புவது அந்த அரசுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் அவமானம்.

மதுவிலக்கு சிறந்தது
மாநில அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு ஏராளமான வழிகள் உள்ளன. இது தொடர்பாக விரிவான கொள்கை ஆவணத்தை கடந்த 2008&ஆம் ஆண்டே பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டிருக்கிறது. மது வணிகத்தின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்தை விட, மது அருந்துவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை போக்குவதற்காக 180% கூடுதல் தொகையை அரசு செலவழிக்க வேண்டியுள்ளது. மதுக்கடைகள் மூடப்பட்டால், மனிதவள சீரழிவு தடுக்கப்படுவதன் காரணமாக தமிழகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பு ரூ. 2 லட்சம் கோடி அதிகரிக்கும். இந்த நன்மைகளுடன் ஒப்பிடும் போது மதுவணிகம் மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவு. மது விலக்கு தான் தமிழகத்திற்கு மிகவும் சிறந்தது.

தமிழக அரசுக்கு கோரிக்கை
சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சரவணன் அளித்துள்ள தீர்ப்பின் மூலம், 3719 குடிப்பகங்களுக்கு புதிய உரிமம் வழங்குவதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். 3719 குடிப்பகங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள உரிமத்துடன் செயல்பட்டு வரும் மீதமுள்ள குடிப்பகங்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் மூடப்பட வேண்டும். தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது தான் தமது எண்ணம் என்று முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகும் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இது சிறந்த வாய்ப்பாகும். முதலில் அனைத்து மதுக் குடிப்பகங்களையும் மூடி விட்டு அடுத்தடுத்தக் கட்டங்களில் மதுக்கடைகளை மூடலாம். மாறாக, உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது, குடித்து விட்டு போதையில் பொது இடங்களில் நடமாடுவோருக்கு தண்டனை விதிக்க வகை செய்யும் மதுவிலக்கு சட்டப்பிரிவுகளை திருத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. அது தமிழக அரசுக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்காது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி 3719 குடிப்பகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். மீதமுள்ள மதுக் குடிப்பகங்கள் எத்தனை? அவை அடுத்த 6 மாதங்களில் எப்போது மூடப்படும்? அவற்றைத் தொடர்ந்து மதுக்கடைகளையும் படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணை ஆகியவற்றைக் கொண்ட செயல்திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
பசு, மாடு, ஆடுகளை வெட்ட தடை.. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு உண்மையில் சொல்வது என்ன? விளக்கம் -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications