சென்னை ஐஐடியில் ஆந்திர மாணவர் தற்கொலை.. விடுதி அறையில் தூக்கில் தொங்கிய சோகம்.. என்ன காரணம்?
மனஅழுத்தத்தால் மாணவர் தற்கொலை செய்தாரா? தற்கொலைக்கு முன்பு கடிதம் அல்லது ஆடியோ ஏதேனும் வெளியிட்டுள்ளாரா? என்பது பற்றி போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.
சென்னை: சென்னை ஐஐடியில் பிடெக் 3ம் ஆண்டு படித்து வந்த ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் இன்று அவர் தற்கொலை செய்துள்ளார். சென்னை ஐஐடியில் தற்கொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்த மத்திய கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்பது பலருக்கும் ஆசையாக இருக்கிறது. இங்கு படித்தால் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும் என்பது தான் முக்கிய காரணமாகும்.
இருப்பினும் கூட இதுபோன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ-மாணவிகள் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதற்கு சென்னை ஐஐடியும் விதிவிலக்கல்ல. இந்நிலையில் தான் இன்றும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:

மாணவர் தற்கொலை
ஆந்திராவை சேர்ந்தவர் புஷ்பக். இவர் சென்னை ஐஐடியில் 3ம் ஆண்டு பிடெக் படிப்பை படித்து வந்தார். இவர் விடுதியில் தங்கி படிப்பை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் தான் இன்று விடுதி அறையில் புஷ்பக் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

போலீஸ் விசாரணை
இதையடுத்து கோட்டூர்புரம் போலீசார் விடுதி அறைக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். புஷ்பக் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.

விசாரணை தீவிரம்
மாணவர் மனஅழுத்தத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில் அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விடுதியில் அவருடன் தங்கியிருந்தவர்கள், விடுதி காப்பாளரிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணைக்கு பிறகே அவரது தற்கொலைக்கான முழுகாரணம் தெரியவரும். மேலும் புஷ்பக் தற்கொலை செய்தது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி சார்பில் விசாரணை குழு
இந்த சம்பவம் சென்னை ஐஐடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபற்றி சென்னை ஐஐடி சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி சார்பில், "சென்னை ஐஐடியில் 3 ஆம் ஆண்டு பி டெக் எலெக்ட்ரிகல் இஞ்சினியரிங் படித்து வந்த மாணவர் மறைந்தது வேதனை அளிக்கிறது. கொரோனாவுக்கு பிந்தைய காலம் சவாலானதாக இருக்கிறது. மாணவர்கள், கல்வியாளர்கள், ஊழியர்களின் நலன் காக்க ஐஐடி மெட்ராஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்தி வருகிறோம். ஐஐடியில் இதுபோன்ற விசயங்களை கண்காணிக்கவும் விசாரிக்கவும் மாணவர் பிரதிநிதிகளை கொண்ட உள் விசாரணை குழு அண்மையில் அமைக்கப்பட்டது. மாணவருடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நடந்த சோகம்
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐ.ஐ.டியில் பயின்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தற்போது ஆந்திராவை சேர்ந்த புஷ்பக் தற்கொலை செய்துள்ளார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications