அண்ணாசாலை இரும்பு மேம்பாலம்! தேனாம்பேட்டை டூ சைதாப்பேட்டை நெரிசலுக்கு தீர்வு! சென்னைக்கு விடிவுகாலம்
சென்னை: சென்னை மாநகரின் போக்குவரத்து நரம்பு மண்டலமான அண்ணாசாலையில், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நிலவி வரும் தீராத போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் கனிந்துவிட்டது. சுமார் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3.2 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச் சாலையாக உருவாகி வரும் இந்தப் புதிய உயர்மட்டை இரும்பு மேம்பாலம், தற்போது இறுதிக்கட்டப் பணிகளை எட்டி பொதுமக்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
சென்னையின் இதயப் பகுதியான அண்ணாசாலையில் பயணிக்கிறீர்கள் என்றால், தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நிலவும் போக்குவரத்து நெரிசல் எவ்வளவு பெரிய சவால் என்பது உங்களுக்குத் தெரியும்.

உயர்மட்ட இரும்பு மேம்பால பணிகள்
இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வாக அமையவுள்ள புதிய உயர்மட்டை இரும்பு மேம்பாலப் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி, மக்கள் பயன்பாட்டிற்காகத் தயாராகி வருகின்றன. சுமார் 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 3.2 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச் சாலையாக இந்த மேம்பாலம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் ஆகப்பெரிய சவாலே இந்தப் பாதையின் அடியில் இயங்கி வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதைதான். சுரங்கப்பாதைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, வழக்கமான கான்கிரீட் கட்டுமானங்களைத் தவிர்த்து, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இரும்புத் தூண்களைக் கொண்டு இந்தப் பாலம் அமைக்கப்படுகிறது.
இரும்பு பாகங்கள்
பாலத்திற்கான இரும்பு பாகங்கள் அனைத்தும் தொழிற்சாலைகளிலேயே முன்கூட்டியே தயார் செய்யப்பட்டு, கட்டுமான இடத்திற்குக் கொண்டு வரப்பட்டு ராட்சத இயந்திரங்கள் மூலம் துல்லியமாகப் பொருத்தப்படுகின்றன. வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் கூட பூமிக்கு அடியில் இருக்கும் மெட்ரோ பாதையைப் பாதிக்காத வகையில் மிக நுணுக்கமாக இந்தப் பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்போதைய நிலவரப்படி, சைதாப்பேட்டையில் பாலம் தொடங்கும் இடத்திலிருந்து சிஐடி காலனி வரையிலான பகுதிகளில் தார் சாலை அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகளும் இரவு பகலாக மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன. இந்தப் பாலம் திறக்கப்பட்டால், அண்ணாசாலையில் சிக்னல்களில் காத்துக் கிடக்கும் நேரம் மிச்சமாவதுடன், வாகன ஓட்டிகளின் எரிபொருள் செலவும் கணிசமாகக் குறையும்.
பழைய மேம்பாலம்
அதேசமயம் மயிலாப்பூர் மியூசிக் அகாடமி சந்திப்பில் உள்ள பழைய மேம்பாலத்தைப் புதுப்பிக்கும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன. அங்குள்ள 22 தூண்களும் நவீன தொழில்நுட்பத்தில் பலப்படுத்தப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட அலங்கார விளக்குகளுடன் அந்தப் பகுதியே புதுப்பொலிவு பெற்று வருகிறது.
மேம்பால பணிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்று பார்த்தால், தூண்களை நிலைநிறுத்தும் வேலைகள் முடிந்து, அவற்றின் மேல் இரும்பு கர்டர்களை பொருத்தக்கூடிய மிக முக்கியமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
குறிப்பாக, நந்தனம் மற்றும் தேனாம்பேட்டை சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நள்ளிரவு நேரங்களில் ராட்சத கிரேன் இயந்திரங்கள் மூலம் இந்தப் பாகங்கள் இணைக்கப்படுகின்றன.
மழைநீர் வடிகால்
பாலத்தின் தளம் அமைக்கப்பட்ட பகுதிகளில் தார் பூசும் பணிகள் ஒருபுறம் நடக்க, மறுபுறம் மழைநீர் வடிகால் அமைப்புகள் மற்றும் மின் விளக்குகள் பொருத்துவதற்கான அடிப்படை வேலைகளும் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதிகாரிகள் ஒவ்வொரு வாரமும் நேரில் சென்று பணிகளின் தரத்தைப் பரிசோதித்து வருவதால், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளேயே ஒட்டுமொத்தப் பணிகளும் முடிந்துவிடும் என்று உறுதியாகத் தெரிகிறது.
அண்ணாசாலை போன்ற மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில், மெட்ரோ சுரங்கத்திற்கு மேலே இரும்பு மேம்பாலம் அமைப்பது என்பது ஒரு மிகப்பெரிய பொறியியல் சாதனை.
இந்தப் பாலம் செயல்பாட்டிற்கு வரும்போது, சென்னையின் உள்கட்டமைப்பு அடுத்த கட்டத்திற்கு நகர்வதுடன், பொதுமக்களின் தினசரி பயணத்தில் நிலவும் மன உளைச்சலும் குறையும் என எதிர்பார்க்கலாம். அரசின் இந்தத் துரித நடவடிக்கை, வளர்ந்து வரும் சென்னைக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்..!!












Click it and Unblock the Notifications