ஐந்தே மாதத்தில் நீதி.. காவல்துறையினரிடம் நான் சொல்வது இதுதான்.. முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கை துரிதமாக நடத்தி 5 மாதங்களில் தீர்ப்பை காவல்துறை பெற்று தந்துள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக பல்கலைக்கழக மாணவி ஒருவர் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் டிசம்பர் 24ஆம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஞானசேகரனை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 தேதி கைது செய்தனர்.

3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு
பின்னர், கோட்டூர்புரம் காவல்துறை விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என கோரி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து, ஜனவரி 5ஆம் தேதி ஞானசேகரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
100 பக்க குற்றப்பத்திரிகை
வழக்கை விசாரித்த சிறப்பு புலானாய்வு குழு, கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை 9வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக சுமார் 100 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் இந்த வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மீது மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் விசாரணையை சென்னை மகளிர் நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச்7ஆம் தேதி மாற்றப்பட்டது.
29 சாட்சிகள்
இதனையடுத்து சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. தினந்தோறும் சாட்சி விசாரணை நடத்தப்பட்டது. வழக்கில் காவல் துறை தரப்பில் 29 சாட்சிகள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர். குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் காவல்துறை தரப்பில் சுமார் 75 சான்று ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.
குற்றவாளி ஞானசேகரன்
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன்பு தீர்ப்புக்காக குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் இன்று காலை 10.30 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, தீர்ப்பை அறிவித்த நீதிபதி, ஞானசேகரனுக்கு எதிரான 11 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என அறிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பதிவு
இவருக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சியினரும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது காவல்துறை.
பாராட்டு
விசாரணை அதிகாரிகளுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றத்துக்கும் நன்றி. காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: "குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!". குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம். சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்! என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications