12 வாரம் அண்ணாமலை absence? அதிமுகவை இழுக்க பாஜக செம ப்ளான்! தமிழிசை கையில் பொறுப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 12 வாரங்கள் வரை அண்ணாமலை தமிழ்நாட்டில் இல்லாததைப் பயன்படுத்தி அதிமுகவை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக பல திட்டங்களை வகுத்து வைத்துள்ளதாகத் தகவல் கசிந்து வருகிறது.

சர்வதேச அரசியல் பற்றிப் படிப்பதற்காக இந்திய அரசியல் தலைவர்கள் சிலருக்கு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் தேர்வாகி உள்ளார். இதற்காக அவர் லண்டன் செல்ல இருக்கிறார். அங்கே அவர் 12 வாரங்கள் வரை தங்கி இருப்பார் எனத் தெரிகிறது. இந்தப் பயணம் பற்றி விளக்கமளிக்க முன்வந்த அண்ணாமலை, "கட்சித் தலைமை அனுமதி அளித்த பிறகே வெளிப்படையாகப் பேச முடியும்" என்று கூறியிருந்தார்.

Annamalai AIADMK

தேசிய தலைமை இவரை விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகப் பேச்சுகள் அடிப்பட்டன. முதலில் இவர் லண்டனில் 6 மாதங்கள் வரை தங்கி இருப்பார் என தகவல் கசிந்தது. இப்போது அவர் 12 வாரங்கள் தங்கி இருப்பார் எனக் கூறப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அவர் தமிழகம் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட இந்தப் பயணத்தை அண்ணாமலை சில மாதங்கள் முன்பாகவே திட்டமிட்டிருந்ததுதான். இவரது பதவிக்காலம் இந்த ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. ஆகவே, அடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? அல்லது இவரையே தேசிய தலைமை தொடர சொல்லுமா? என்பது பற்றி ஒரு தெளிவான தகவல் இல்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தது. அதற்கு முன்பாக அவர் கொங்கு மண்டலத்தை முழுமையாக பாஜக கைப்பற்றும் என்று கூறியிருந்தார். ஒவ்வொரு ஊடக சந்திப்பின் போது தான் சொல்வதை அப்படியே எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அடித்துப் பேசி வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு கசப்பான செய்தியைக் கொடுத்தது.

இப்போது அடுத்ததாக வந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அண்ணாமலை அதிக வாக்குறுதிகளை அளித்தார். இந்தத் தேர்தல் முடிவும் அவரது கூட்டணிக்கு எதிராகவே இருந்தது. எனவே பாஜகவுக்குள்ளாகவே அண்ணாமலையின் தடாலடி அரசியல் பற்றி ஒரு எதிர்ப்பு நிலவி வருவதாக சொல்லப்படுகிறது. மூத்த தலைவர்கள் தேசிய தலைமைக்கு அண்ணாமலையின் பக்குவமற்ற பேச்சுகள் பற்றி எடுத்துப் புரியவைத்து வருவதாகவும் சொல்கிறார்கள். ஆக மொத்தம் கமலாலயத்திற்கு அண்ணாமலையை எதிர்க்கக் கூடிய உருவாகி உள்ளனர். கடந்த சில ஆண்டுகள் முன்பாக அப்படி இல்லை. முழுக் கட்டுப்பாட்டையும் அண்ணாமலை தன் கையில் வைத்திருந்தார்.

வரும் 2026 மக்களவைத் தேர்தலை அண்ணாமலையின் திட்டத்தின்படி வியூகம் அமைத்துச் செயல்பட்டால் படுதோல்வி நிச்சயம் என்பதை தேசிய தலைமைக்கு எடுத்துக் கூறியுள்ளனர். இந்தச் செய்திகள் தமிழிசை செளந்தரராஜன் வழியாகத் தேசிய தலைமைக்குச் சிலர் கொண்டுபோய் உள்ளனர். எப்படியும் ஆட்சியைப் பிடிக்க 35% வாக்குகள் தேவை. அது பாஜக மற்றும் பாமகவை மட்டுமே வைத்திருந்தால் நடக்காது. கட்டாயம் அதிமுக கூட்டணிக்குள் வரவேண்டும். அப்போதுதான் திமுகவை எதிர்க்க முடியும்.

மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் விசிக, நாதக, தவெக கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள். விசிக, நாதக இந்த மக்களவை தேர்தலில் மாநிலக் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து விஜய்யின் கட்சிக்கு 8% வாக்குகள் கிடைக்கலாம் என்று நம்பப்படுகிறது. அதையும் பாஜக சமாளித்தாகவேண்டும். பாஜகவைக் கழற்றி விட்டுவிட்டு நாதக, விசிக, தவெக அதிமுக கூட்டணிக்குச் சென்றால், அது காவிக் கட்சிக்குள் கலவரத்தை உண்டாக்கலாம்.

ஆகவே, அண்ணாமலை ஊரில் இல்லாத இந்த 12 வார இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள பாஜக தேசிய தலைமை திட்டமிட்டு வருகிறது. அதற்காகத்தான் அண்ணாமலையின் இந்த லண்டன் பயணமே போடப்பட்டுள்ளது என்கிறார்கள். அதாவது இயற்கையாக இந்த இணைப்பை உண்டாக்குவதைப் போல பாஜக ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த விரும்புகிறது.

இந்த இடைக்காலத்தில் தமிழிசைக்கு மாநிலத் தலைமைப் பொறுப்பு கைமாறும் என்கிறார்கள். அவர் அதிமுக தலைமையோடு பேசி பேரத்தை முடித்துவிடுவார் என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். குறிப்பாக இதே கருத்தை பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட திருச்சி சூர்யா கூறிவருகிறார். மேலும் இவர் அண்ணாமலை பற்றிய பல உட்கட்சி ரகசியங்களை வெளி உலகம் அறியும்படி போட்டு உடைத்து வருகிறார். அது அண்ணாமலையில் பெயரை டேமேஜ் செய்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலை மீதுதான் விமர்சனம் உள்ளது. பாஜக மீது அவருக்கு எந்தவித வருத்தமும் இல்லை.

ஆகவே, இந்த 12 வாரங்களில் அதிமுகவை தன் பக்கம் பாஜக கொண்டு வந்துவிடும் என்கிறார்கள்.கூடவே டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் ஆகிய மூவரும் இணைக்கப்பட்டுவிடுவார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த மூன்று பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் தென்மாவட்டங்களில் அதிமுக தனது பலத்தை இழந்துள்ளது. அதையும் மீட்க வேண்டும் என்றால் இந்த 3 தலைகள் உள்ளே வர வேண்டும். அதற்காக ஒரு ரோடு மேப் ஐ பாஜக மேலிடம் வழங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

எப்படிப் பார்த்தாலும் அண்ணாமலை லண்டனிலிருந்து திரும்பும் போது எடப்பாடி பழனிசாமி பாஜக கூட்டணிக்குள் இருப்பார் என்கிறார்கள். அதற்கு சில 'மணி'கள் அழுத்தம் கொடுப்பார்கள் என்றும் சொல்கிறார்கள். அதே நேரத்தில் தனது கட்டுப்பாட்டை விட்டு மாநிலத் தலைமைப் பொறுப்பு போய்விடாமல் இருக்க, அண்ணாமலை சில வியூகங்களை வகுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவரது கைக்கு அடக்கமாகச் சிலரை அவர் நியமிக்க வலியுறுத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

நயினார் நாகேந்திரனை வழக்கு விசாரணை நெருங்கிக் கொண்டிருப்பதால் அவரை தலைமைக்குத் தேர்வு செய்வதில் சிக்கல் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்த வானதி சரியாக இருப்பாரா என்றும் தலைமை ஒரு பக்கம் யோசித்து வருகிறது. எப்படிப் பார்த்தலும் காரியத்தைப் பதறாமலும் சிதறாமலும் செய்வதில் தமிழிசையே முன் வரிசையில் இருக்கிறார் என்கிறது கமலாலய வட்டாரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+