“வகுப்பறைக்கு போய் ‘நீங்க கோமியம் குடிங்க’னு சொல்லலயே” ஐஐடி இயக்குநருக்கு அண்ணாமலை சப்போர்ட்!
சென்னை: சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, மாட்டு கோமியம் குடிப்பது நல்லது எனப் பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், “அவர் ஒரு வகுப்பறையில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து நீங்க குடிங்க என்று சொல்லவில்லையே” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோசாலை ஒன்றில் மாட்டுப் பொங்கலுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்றார். இந்த விழாவில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, பசுமாட்டு கோமியம் குடிப்பது பற்றி பேசியுள்ளார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசுகையில், “எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. ஒரு சந்நியாசி வந்தார். அந்த சந்நியாசியின் பெயர் எனக்கு மறந்து விட்டது. எனது அப்பா சொன்ன உடனே, கோமியத்தை சந்நியாசி குடிக்கச் சொன்னார். உடனே கோமியத்தை எடுத்து வந்து அப்பா குடித்தார். 15 நிமிடத்தில் அவருக்கு ஜூரம் போய்விட்டது. பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இந்த மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறி இருந்தார்.
இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம், பசுக்கள், எருமைகளின் சிறுநீரை ஆராய்ச்சி செய்ததில், கோமியம் மனிதர்கள் குடிப்பதற்கு உகந்தது அல்ல என தெரிவித்துள்ளது. இதை மனிதர்கள் அருந்தினால் பல மோசமான நோய்கள் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளது. அறிவியல் பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்தது இல்லை எனக் கூறப்படும் நிலையில், இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கும் சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடியின் இந்த பேச்சு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், காமகோடியின் பேச்சை விமர்சித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், போலி அறிவியலை ஊக்குவிக்கும் வகையில் பேசிய ஐஐடி இயக்குநர், அந்த பதவிக்கு மிகவும் பொருத்தமற்றவர் எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி இந்த விவகாரம் குறித்துப் பேசுகையில், “ஐஐடி போன்ற மிகச்சிறந்த கல்லூரியின் இயக்குநர் இவ்வாறு பேசுவது உண்மையில் வருந்தத்தக்கது. பசுமாட்டு கோமியத்தை முதலில் அவர் குடிக்க வேண்டும், அவர் அதைத்தான் குடித்துக் கொண்டு இருக்கிறார் என நினைக்கிறேன், அதனால்தான் அவர் இப்படியெல்லாம் பேசி வருகிறார்.
மாட்டு கோமியம் உடம்புக்கு கெடுதியானது என ஏற்கனவே அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்ட நிலையில், அறிவியல் ரீதியான ஒரு பல்கலைக்கழகத்தில் இயக்குநராக இருந்து கொண்டு இப்படி சொல்லியிருப்பது எந்த அடிப்படையில், ஏன் இப்படி சொல்கிறார் என புரியவில்லை. அறிவியல் ரீதியாக சிந்திக்ககூடிய, பகுத்தறிவு சிந்தனை உடையவர்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி இந்தியாவில் அவருடைய துறையில் பெரிய நிபுணர். அவருக்கு அவர் சார்ந்த இருக்கக்கூடிய மதத்தின் மீது பற்று இருக்கிறது, அதில் தவறு கிடையாது. மார்கழி மாதத்தில் பாராயணம் பாடுவது தவறு கிடையாது. பசுமாட்டின் மீது நம்பிக்கை இருப்பது தவறு கிடையாது, அது அவருடைய கோட்பாடு.
அவர் வகுப்பறைக்குள் சென்று பாடம் எடுத்து நீங்க குடிங்க என்று சொல்வது கிடையாது, அவருடைய தனிப்பட்ட நிலைப்பாடு பற்றி குறை கூறக்கூடாது. ஒரு கருத்தை மட்டும் பிரதானப்படுத்தி அதை அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் அவரைப் பற்றி தெரியும். அவருடைய சாதனையை தெரியும், Al தொழில்நுட்பத்தில் சிறந்த பேராசிரியராக இருந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications