30 நாட்கள் கெடு.. 10 லட்சம் பேருடன் வருவேன்.. திமுக அரசு 750 நாட்களில் காலி.. சொல்கிறார் அண்ணாமலை
சென்னை: பெட்ரோல் டீசல் விலையை குறைக்க 30 நாட்கள் நேரம் தருகிறோம். குறைக்காவிட்டால் திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பேரணியை நடத்துவோம் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் திமுக அரசு 750 நாட்களில் அதாவது இன்னும் 2 ஆண்டுகளில் கலைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ 3 ம் குறைப்போம் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு விலை குறைப்பை செய்யவில்லை.
இதுகுறித்து எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ 3 குறைப்பதாக முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள்
சொன்னதோ ரூ 5 குறைத்ததோ ரூ 3 என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. மேலும் டீசல் விலை என்னாச்சு என கேள்வி எழுப்பி வந்தன. இந்த நிலையில் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால் தமிழக அரசுக்கு மேலும் நிதிச் சுமை என தெரிந்தும் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்துவிட்டது, நீங்கள் எப்போது குறைப்பீர்கள் என பாஜகவினர் கேள்வி எழுப்பினர்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பதில் அளித்தனர். இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையை 72 மணி நேரத்தில் குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என பாஜக அண்ணாமலை அறிவித்திருந்தார்.

சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம்
இதையடுத்து இன்றைய தினம் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே பாஜகவினர் குவிந்து கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலை கூறுகையில் மத்திய அரசு இரண்டு முறை கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது. ஆனால் இங்கே சினிமா அரசு வாய் சவடால் விட்டு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மறுக்கிறது.

கச்சத்தீவு
திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. இன்னும் 750 நாட்கள்தான் இருக்கின்றன. அதாவது இன்னும் 2 ஆண்டுக்கு இந்த விடியா அரசை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். தமிழகம் கஞ்சா தலைநகரமாக மாறி உள்ளது. இன்னும் இரு தினங்களில் அடுத்த கட்ட ஊழல் பட்டியலை வெளியிடவுள்ளோம். கச்சத்தீவை திமுக கனவில் கூட மீட்க முடியாது. பாஜகவிடம் விட்டுவிடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.

30 நாட்களுக்கு பிறகு
30 நாட்களுக்கு பிறகு தமிழக அரசு செவி சாய்க்காவிட்டால் 10 லட்சம் பாஜகவினர் திருச்சியில் திரண்டு மாபெரும் பேரணியில் ஈடுபடுவோம். அந்த பேரணி திமுகவுக்கு அஸ்தமனமாக அமைந்துவிடும். அடுத்த 2 ஆண்டுகளுக்கு பாஜக தொண்டர்கள் போராட்டத்துக்கும் கைதுக்கும் தயாராக இருக்க வேண்டும். இனி திமுகவை சும்மா இருக்க விட போவதில்லை என்றார்.

ஆட்டோவில் புறப்பட்ட அண்ணாமலை
பின்னர் மேடையில் இருந்து இறங்கி போலீஸார் வைத்திருந்த தடுப்பு வேலியை நோக்கி முற்றுகைப் போராட்டத்திற்கு அனைவரும் புறப்பட்டனர். போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகை போராட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து அண்ணாமலை புறப்பட தயாரான போது அவருடைய வாகனம் வருவதற்கு தாமதமானது. இதனால் அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் அவர் புறப்பட்டு சென்றார்.

என்னாது 750 நாட்களிலா?
இந்த பேட்டியில் திமுக ஆட்சிக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது. இன்னும் இரு ஆண்டுகளதான் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திமுக அரசின் 5 ஆண்டுகளில் ஓராண்டு முடிந்துவிட்டது. இன்னும் 4 ஆண்டு பதவிக்காலம் இருக்கிறது. ஆனால் அண்ணாமலையோ இன்னும் இரு ஆண்டுகள்தான் ஆட்சி என்கிறார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கையிலெடுக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது. அதாவது நாடாளுமன்றத்திற்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதாகும். இன்னும் இரு ஆண்டுகளில் அந்த திட்டத்தை சட்டமாக்கினால் திமுக ஆட்சியை இழக்கும் என்றும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்பதைதான் அண்ணாமலை கூறியுள்ளார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications