“அந்தர் பல்டி” அண்ணாமலை.. வெங்காய உத்தி! ஊழல் பட்டியல் இல்லாததால் என் மீது புகார் - காயத்ரி காட்டம்
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது அவதூறு பரப்பியதாக பாஜக முன்னாள் நிர்வாகி நடிகை காயத்ரி ரகுராம் மீது அக்கட்சியின் வழக்கறிஞர் அணி புகாரளித்து பின்னர் வாபஸ் பெற்று இருக்கும் நிலையில், ஊழல் பட்டியல் இல்லாததால் அதை திசை திருப்ப பழிவாங்கும் போலி புகாரை கொடுத்து இருப்பதாக அவர் விமர்சித்துள்ளார்.
பாஜக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சியை, அக்கட்சியில் அங்கம் வகித்த திருச்சி சூர்யா சிவா தகாத வார்த்தைகளால் பேசியது கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய இந்த ஆடியோவை வெளியிட்ட தனியார் ஊடகத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை பாஜக முன்னாள் நிர்வாகியான நடிகை காயத்ரி ரகுராம் பகிர்ந்து இருந்து சூர்யா சிவாவை கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அதில் "சொந்த கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்? இவர்களுக்கு கட்சியில் மாநில பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு. மற்ற கட்சிகளில் இருந்து புதிதாக இணைந்தவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை உணரவில்லை. இந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். மற்றும் கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும்." என்று தெரிவித்தார்.
காயத்ரி ரகுராம் அண்ணாமலை மோதல்: இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை காயத்ரி மீது நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "காயத்ரி ரகுராம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார்." என்று அறிவித்தார். அதேபோல் "ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை திரு சூர்யா சிவா அவர்கள் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறோம்." என்றும் உத்தரவிட்டார்.
இதனை அடுத்து தமிழ்நாடு பாஜக நிர்வாகம் மீதும் அண்ணாமலை மீதும் ட்விட்டரில் பல்வேறு விமர்சனங்களை காயத்ரி ரகுராம் தொடர்ந்து முன்வைத்து வருகிறார். அண்ணாமலை ஹனி டிராப், வார் ரூம் மூலமாக சக பாஜக நிர்வாகிகளையே மிரட்டுவதாகவும் கட்சிக்கு உழைக்காமல் தன்னை விளம்பரம் செய்துகொள்வதாகவும் காயத்ரி குற்றம்சாட்டினார்.
கட்சியில் இருந்து விலகல்: 150 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில் தன்னை அண்ணாமலை அவமானப்படுத்தியதாக குற்றம்சாட்டி தமிழ்நாடு பாஜகவில் இருந்தே விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். இதனை தொடர்ந்து அண்ணாமலையும் காயத்ரி ரகுராமை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக தினசரி அண்ணாமலையை விமர்சித்து பல பதிவுகளை ட்விட்டரில் காயத்ரி ரகுராம் வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் இன்று பாஜக வழக்கறிஞர் அணியினர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக சென்னை சைபர் கிரைம் போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள காயத்ரி ரகுராம், "அண்ணாமலை, நான் உங்களை துஷ்பிரயோகம் செய்தேன், மிரட்டுகிறேன், உங்களை பிளாக்மெயில் செய்தேன் என்று திரு ஜிஎஸ் மணி அவர்களிடம் அழுதீர்களா? நான் எப்போது செய்தேன்? உங்கள் நகைச்சுவை கருத்துக்களுக்காக நான் சிரித்துவிட்டு என் நகைச்சுவை கருத்துகளை தெரிவித்தேன். அவ்வளவுதான்.. ஏன் இவ்வளவு சீரியஸ் அண்ணாமலை? நீங்களும் சினிமா துறையைப் பற்றி பேசியுள்ளீர்கள். கருத்து சுதந்திரம் தானே.. கோச்சிக்க கூடாது.
புகார் வாபஸ்: ஏப்ரல் 14 அன்று ஊழல் பட்டியல் அவரிடம் இல்லை அதனால் தான் திசை திருப்ப என் மீது பழிவாங்கும் போலி புகார். Source வெங்காய உத்தி." என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் அண்ணாமலை தன்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த புகாரை திரும்பப்பெற்றுக் கொண்டதாக பாஜக வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் ஜி.எஸ்.மணி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் காயத்ரி ரகுராம், அண்ணாமலை, கால் முன்னோக்கி அல்லது பின்னோக்கி வைக்க வேண்டாம். தயவு செய்து ஒரு முடிவுக்கு வாருங்க. அந்தர் பல்டி அண்ணாமலை." என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications