PTR vs Annamalai: “இதை சொல்ல மறந்துட்டீங்கண்ணே”.. அமைச்சர் பிடிஆரை மீண்டும் சீண்டிய அண்ணாமலை!
சென்னை: அண்ணாமலை கேள்விக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்திருந்த நிலையில், "தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியுள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அந்த இரு மொழிகள் எவை என்பதை சொல்ல மறந்துவிட்டார்." என மீண்டும் விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.

பிடிஆர் மகன்கள் கற்ற 2 மொழிகள்
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள்,
முதல் மொழி: ஆங்கிலம்
இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ்
இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா?
வெளங்கிடும்!
தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப் பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.
அறிவுள்ளவர்கள் மும்மொழி கொள்கையை ஏற்பார்களா?
முன்னதாக, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், "அறிவுள்ளவர்கள் யாராவது மும்மொழிக் கொள்கையை ஏற்பார்களா?" என நேற்று மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பி இருந்தார்.
அதற்கு தூத்துக்குடியில் பதில் அளித்த அண்ணாமலை, "அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் எங்கு படிக்கிறார்? அமைச்சராக இருப்பவர், மும்மொழிக் கொள்கையை ஏற்பவர்களை அறிவுள்ளவர்களாக ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறியதற்காக நான் அவரிடம் திரும்பக் கேட்க விரும்புகிறேன்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா? என்பதற்கு பதில் சொல்லி விட்டு பேசுங்கள். உங்கள் மகன் எந்தப் பள்ளியில் படிக்கிறார்? உங்களது மகன் மூன்று மொழி சொல்லி கொடுக்கும் பள்ளியில் படிக்கிறார் என்றால் உங்களுக்கு அறிவில்லை என்று தானே அர்த்தம்." எனத் தெரிவித்திருந்தார்.
பிடிஆர் சொன்ன பதில்
மதுரையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலையின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது மகன்கள் பள்ளிப் படிப்பை இருமொழிக் கொள்கையிலேயே படித்ததாகவும், இந்தி முன்னிறுத்தப்படுவதை தொடர்ந்து எதிர்ப்போம் என்றும் திட்டவட்டமாக கூறினார்.
உத்திர பிரதேசத்தில் ஒருமொழிக் கொள்கையை கூட நிறைவேற்ற முடியாமல் பிஎம் ஸ்ரீ நிதியை நிறுத்தி வைத்துவிட்டு தெருவில் ரவுடி பேசுவது போல் பேசி வருகின்றனர். புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது இன்றைக்கு சாத்தியமே இல்லை, அதற்கான நிதி உட்கட்டமைப்பு என்பது இல்லை. அனைவருக்கும் ஒரே கல்வி கிடைக்கவேண்டும் என்ற முடிவால் கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. ஆனால் அதை விடுத்து 34 அமைச்சர்களின் மகன்கள் எங்கே படிக்கிறார்கள் என்று தனிப்பட்ட கேள்வியாக மாற்றி வருகிறார்கள்.
பாஜகவைச் சேர்ந்த ஒருவர் எனது மகன்கள் எந்த மொழியில் பயின்றார்கள் என்று கேட்கிறார், எனது இரு மகன்களின் பெயர் பழனி மற்றும் வேல். அவர்கள் எல்.கே.ஜி முதல் பட்டப்படிப்பு வரையில் இருமொழி கொள்கையில் தான் பயின்று வந்துள்ளார்கள். ஏதாவது ஒரு இடத்தில் மும்மொழி கொள்கையில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்கள் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிய பிறகு நாங்கள் விவாதத்திற்கு வருகிறோம், அதுவரை இரு மொழிக் கொள்கைதான் தமிழ்நாட்டில் இருக்கும்" என பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications