அண்ணாமலைக்கு அட்வைஸ் பண்ணுங்க மோடிஜி! மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார் - கொதித்த மாணிக்கம் தாக்கூர்
டெல்லி: தமிழ்நாட்டில் சிறுவர்களின் தற்கொலையை வைத்து மத பதற்றத்தை தூண்டிவிடும் அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை வழங்க வேண்டும் என விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வலியுறுத்தி இருக்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் "தமிழ்நாடு எப்போதும் அமைதியான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. நாங்கள் சமய ஒற்றுமையையும், நம்பிக்கையையும் கொண்டாடி வருகிறோம்.

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக புதிய வகையான அரசியல் செய்யப்பட்டு வருகிறது. அதுதான் பிண அரசியல். குறிப்பாக கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் ஒவ்வொரு சிறுவர்களின் தற்கொலைகளை வைத்தும் மத பதற்றத்தை உருவாக்கி வருகிறார்.
தற்கொலை செய்து கொண்ட சிறுவர்களோடு கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை தொடர்புபடுத்தி தவறான தகவல்களை பரப்பி வருகிறார். இதன் மூலம் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயல்கிறார். மதுரையிலும் தஞ்சாவூரில் இதே வேலையை அவர் செய்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட்டு தனது கட்சிக்காரரிடம் இதுபோன்ற இழிவான அரசியலை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்த வேண்டும்." என அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு அவர் படித்த கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் கொடுத்த மதமாற்ற அழுத்தமே காரணம் என அண்ணாமலை குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்திய தேசிய குழந்தைகள் நல ஆணையம் மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை என அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications