கலக்குறோம்..ஜெயிக்கிறோம்..கொண்டாட தயாராகுங்கள்! அண்ணாமலை சொன்ன வார்த்தை! குதூகலத்தில் பாஜக ‘தலைகள்’
சென்னை: தென்னிந்தியாவில் இந்த முறை அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற இருக்கிறோம் எனவும், டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும் எனவும் சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேச பாஜகவினர் உற்சாகமாகினர்.
இரு மாதங்களுக்கு மேலாக இந்தியாவை மையம் கொண்டிருந்த தேர்தல் புயல் இன்னும் சில தினங்களில் ஓய இருக்கிறது. 18-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதுவரை ஆறு கட்ட தேர்தல்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தல்: அன்றைய தினம் காலை 11 மணிக்கு எல்லாம் முன்னிலை நிலவரங்கள் தெரிந்து விடும். நண்பகலில் இந்தியாவை ஆளப்போவது யார் என்ற கேள்விக்கும் விடை கிடைத்துவிடும். தற்போதைய சூழலில் பாஜக 400 தொகுதிகளில் வென்று முறையாக ஆட்சி அமைக்கும் என அந்த கட்சியினர் கூறி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தீவிர பிரசாரம்: காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி பல மாநிலங்களில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. அந்த கூட்டணி சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய முகங்கள் தேர்தலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக இந்த தேர்தலை மிக முக்கியமானதாக கருதுகிறது.
அண்ணாமலை ஆலோசனை: கடந்த காலங்களில் திமுக அதிமுக அல்லது தனித்து என களம் கண்ட பாஜக தற்போது தனது தலைமையிலேயே ஒரு கூட்டணியை உருவாக்கி தேர்தலை சந்தித்து இருக்கிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் கூட்டத்தை கூட்டி இருக்கிறார். இதில் தமிழிசை சௌந்தரராஜன், ராம சீனிவாசன் உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள், மாவட்ட, மண்டல தலைவர்கள் வாக்கு சாவடி முகவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று இருக்கின்றனர்.
பாஜக வெற்றி: சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மஹாலில் அண்ணாமலை தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை வாக்குப்பதிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனுடைய தென்னிந்தியாவில் பாஜக மிகப் பெரும் வெற்றி பெறும் தொண்டர்கள் கொண்டாட தயாராக இருக்க வேண்டும் என அண்ணாமலை பேசியிருக்கிறார்.
அதிக எம்பிக்கள்: கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,"தென்னிந்தியாவில் இந்த முறை அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களை நாம் பெற இருக்கிறோம், டெல்லியில் பாஜக இந்த முறை 60% வாக்குகள் பெறும்.. 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்.. இதுதான் காலத்தின் கட்டாயம். டெல்லி, குஜராத் போன்ற இடங்களில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெல்லும்.
ஜூன் 4ஆம் தேதி: ஜூன் நான்காம் தேதி அன்று பாஜகவின் வெற்றியை கொண்டாட தாமரை சொந்தங்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும்.. வட இந்தியா மட்டுமல்ல தென்னிந்தியா மட்டுமல்ல இந்தியா முழுவதும் தாமரை படர்ந்து இருக்கும் அந்த அற்புதமான காட்சியை ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு இங்கிருக்கும் அனைவருமே பார்க்கப் போகிறீர்கள்.. ஜூன் நான்காம் தேதிக்கு பிறகு வடக்கு தெற்கு என்ற பேச்சு எங்குமே இருக்காது." என பேசினார். அண்ணாமலை பேச பேச அங்கிருந்த பாஜகவினர் உற்சாகமாக கை தட்டி ஆர்ப்பரித்தனர்.












Click it and Unblock the Notifications