Annamalai: அடையாறில் டிடிவி தினகரன், போயஸ் கார்டனில் ரஜினியை சந்தித்தது ஏன்? அண்ணாமலை விளக்கம்
சென்னை: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை நான் சந்தித்து பேசினேன் என்றும் அவருடன் என்ன பேசினேன் என்பது குறித்தும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கியுள்ளார். மேலும் ரஜினியை தான் சந்தித்தது எதற்காக என்பதையும் அவர் விளக்கியுள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.

மேலும் தான் விலகியதற்கு நயினார் நாகேந்திரன்தான் காரணம் என்றும், அண்ணாமலை பாஜக தலைவராக இருந்த வரை எல்லா கூட்டணி கட்சிகளையும் அரவணைத்து செல்வார். ஆனால் நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமியே போதும் என நினைக்கிறார் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியிருந்தார்.
ஓபிஎஸ்
ஓபிஎஸ்ஸும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் பேசி சமாதானம் செய்வதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.
டிடிவி தினகரன்
இந்த நிலையில் டிடிவி தினகரனை தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை குறித்து இன்று செய்தியாளர்களிடம் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
சுற்றுப்பயணம்
அவர் கூறுகையில், டிடிவி தினகரன், 2024 ஆம் ஆண்டு முதல் எங்களுடன் பயணம் செய்கிறார். கடந்த ஒரு மாதமாக சுற்றுப்பயணத்தில் இருந்ததால் அவர் சென்னை வந்ததும் சந்தித்து பேசினேன். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் விவாதித்தோம்.
தினகரனுடன் சந்திப்பு
நான் டிடிவி தினகரனை சந்திக்க போகிறேன் என்பதை பகிரங்கமாக அறிவித்தேன். ரகசியமாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தினகரனுடன் எனக்கும் பாஜகவுக்கும் நட்புறவு தொடர்கிறது. மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும் என அவரிடம் வலியுறுத்தினேன்.
களம் சூடு
அவரது முடிவுக்கு காத்திருக்கிறோம். நவம்பர் மாதத்திற்கு பிறகு சொல்வதாக கூறியிருக்கிறார். தேர்தல் களத்தின் சூடு வரும் போது முடிவுகள் மாறும் என நம்புகிறேன். 2024 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எங்களை நம்பி வந்தவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன்.
நிரந்தர எதிரி இல்லை
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பரும் இல்லை. டிடிவி தினகரனை போல் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸையும் சந்திப்பேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ரஜினியை சந்தித்தது ஏன்
அது போல் ரஜினியையும் அண்ணாமலை சந்தித்திருந்தார். இதை பலர் அரசியலாக்கினர். இதுகுறித்தும் அண்ணாமலை விளக்கம் அளித்திருந்தார். அதில், " ரஜினி எனது குரு, ஆன்மீக ரீதியாக அவருடன் ஆத்மார்த்தமான நட்பு எனக்கு உள்ளது. மாதம் ஒரு முறையாவது அவரை நான் சந்திப்பேன். இதை தயவு செய்து யாரும் அரசியலாக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தல்
அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி டெல்லி போனார். பின்னர் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருந்தார். தற்போது அண்ணாமலை டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார். இனி ஓபிஎஸ்ஸையும் சந்திப்பேன் என தெரிவித்திருந்தார். இதனால் தேர்தலுக்குள் என்னென்ன மாற்றங்கள் வரும் என்பதை தமிழக மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
எதிர்பார்ப்பு
பாமக, தேமுதிக இன்னும் கூட்டணி குறித்து முடிவு செய்யாமல் இருப்பதால் அவர்களின் நகர்வுகள் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications