வாயில்லா ஜீவன் ஆட்டை வெட்டாதீர்கள்.. என் மீது கை வைத்து பாருங்கள்.. அண்ணாமலை அரைகூவல்
சென்னை: ஆட்டின் கழுத்தில் என் புகைப்படத்தை மாட்டி வைத்து நடுரோட்டில் அதை திமுகவினர் வெட்டிக் கொன்றனர், இனி ஆட்டை கொடுமைப்படுத்தாதீர்கள், என் மீது கோபம் என்றால் என் மீது கை வையுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்வி குறித்து கோவையில் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்த போது அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் நிச்சயம் 30 முதல் 35 தொகுதிகளை வென்றிருப்போம்.

தமிழிசை, எல்.முருகன் ஆகியோர் தமிழக பாஜக தலைவர்களாக இருந்த போது அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை பாஜக தலைவராக இருக்கும் போதுதான் அதிமுக- பாஜக கூட்டணிக்குள் முறிவு ஏற்பட்டுவிட்டது என பேசியிருந்தார்.
அதற்கு அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் அதிமுக தனியாக இருக்கும் போதே ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவில்லை. கூட்டணி அமைத்திருந்தால் மட்டும் எஸ்.பி. வேலுமணி சொல்வதை போல் எப்படி 35 இடங்களில் அதிமுக வென்றிருக்க முடியும்.
எடப்பாடி பழனிசாமி- வேலுமணி இடையே உள்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. அதிமுகவை மக்கள் நிராகரித்துவிட்டனர் என்பது தேர்தல் தரும் பாடமாக உள்ளது. திமுகவினர் ஆட்டை நடு ரோட்டில் இழுத்து வந்து வெட்டி அதை புகைப்படமாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
வாயில்லா ஜீவன் ஆட்டை வெட்டாதீர்கள். திமுகவினருக்கு என் மீது கோபம் இருந்தால் என் மீது கை வைக்கலாம். நான் அரவக்குறிச்சியில்தான் விவசாயம் பார்த்து வருகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை கையில் ரபேல் வாட்ச் கட்டியிருந்தார். அது குறித்து திமுகவினர் கேள்வி எழுப்பிய போது தனக்கு வசதியெல்லாம் இல்லை என்றும் வெறும் ஆட்டை வைத்து பிழைத்து வருகிறேன் என கூறியிருந்தார். அது முதல் அவரை திமுகவினர் ஆட்டுக்குட்டி என்றும் ஆடு என்றும் கிண்டல் செய்து அழைத்து வந்தனர்.
கோவையில் லோக்சபா வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டதுமே திமுகவினர் சமூகவலைதளங்களில் ஆட்டை பிரியாணி போடுவோம் என கிண்டலாக தெரிவித்திருந்தனர். அப்போது கூட செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை ஆட்டை பிரியாணி சமைத்தாலும் கொடுமைப்படுத்தாமல் செய்யுங்கள் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும் கோவையில் திமுக டெபாசிட் வாங்காது என சவால் விட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் கோவை லோக்சபா தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் அண்ணாமலை தோல்வி அடைந்த போது திமுகவினர் மட்டன் பிரியாணி கொண்டு வந்து விநியோகம் செய்தனர். இந்த நிலையில் கோவை வெற்றியை கொண்டாடும் வகையில் திமுகவினர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
அதில் திமுகவினர் பட்டப் பகலில் நடுரோட்டில் வைத்து ஒரு ஆட்டை வெட்டுகிறார்கள். ஆட்டின் கழுத்தில் அண்ணாமலை படத்தை மாட்டிவிட்டு அந்த படத்தையும் சேர்த்து ஒரே வெட்டாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் ஆடு துடிக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது. மட்டன் பிரியாணி செய்வதற்காக ஆட்டை வெட்டிய போது வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆட்டை வெட்டுவது போல் அண்ணாமலையை வெட்டிக் கொல்வோம் என்ற அர்த்தத்தில் அவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த ஆடு வெட்டும் வீடியோவுக்குத்தான் அண்ணாமலை ஆட்டை எதுவும் செய்யாதீர்கள் என் மீது கை வையுங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications