திருமா அண்ணாவுக்கு ‘அந்த’ பதவிக்கு வர ஆசை.. மொதல்ல வெளிய வாங்க.. ‘மாலை’ போட்டு அழைப்பேன் : அண்ணாமலை
திருமாவளவன் திமுக கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் என அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை : திருமாவளவன் அண்ணாவுக்கு துணை முதல்வராக வேண்டும் என்று கொஞ்சம் ஆசை. அதனால் ஸ்டாலினிடம், 'கூட்டணியைவிட்டு போய்விடுவேன்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படி போவதாக இருந்தால் அண்ணா நீங்க தயவுசெய்து வெளியே வாங்க. நானே மாலையைப் போட்டு கூப்பிடுகிறேன்." எனக் கூறியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, பாஜகவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது பாமக மற்றும் பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது எனப் பேசினார்.
இந்நிலையில், திருமாவளவன் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார் அண்ணாமலை.

திருமா காட்டம்
தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் விதமாக பாஜக செயல்படுவதாகவும், அண்ணாமலை, சட்டம் ஒழுங்கைக் கெடுக்கும் வகையில் பேசுவதாகவும் குற்றம்சாட்டி நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், பாஜகவை கடுமையாக விமர்சித்ததோடு, கூட்டணியில் இருந்துகொண்டே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு காவல்துறையையும் மிகக்கடுமையாக விமர்சித்தார்.

ஸ்டாலின் கட்டுப்பாட்டிலா? அமித்ஷா கட்டுப்பாட்டிலா
விசிக ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன் எம்.பி, 90 வயதில் சமூக நீதிக்காக பயணம் செய்யும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் காரை சூழ்ந்துகொண்டு அச்சுறுத்துகிறார்கள். காவல்துறை மெத்தனமாக உள்ளதா? தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறதா? தமிழ்நாடு காவல்துறை பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறதா? தமிழ்நாடு காவல்துறை தமிழக முதல்வர் ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இயங்கவேண்டுமே தவிர, அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடாது என்று ஆவேசமாக பேசினார்.

அடிக்கத் தெரியாம அடிக்கிறாங்க
இந்நிலையில், பாஜக சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் அண்ணாமலை. அப்போது பேசிய அவர், "பாஜகவுக்கும், விசிகவுக்கும் இடையிலான யுத்தம் கிடையாது. விசிகவுக்கும் அண்ணன் தடா பெரியசாமிக்கும் நடக்கும் யுத்தம் இது. விசிகவினர் அண்ணன் தடா பெரியசாமியிடம் போட்டியிட்டு, அதன் பிறகு எங்கள் கிளை தலைவரிடம் மோதுங்கள். அவரை எதிர்க்கிறேன் என்று அவர் வீட்டில் போய் அவரது காரை அடிக்க தெரியாமல் அடிப்பது, கண்ணாடியை உடைக்க தெரியாமல் உடைப்பது என விசிகவினர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு ஆளை சொல்லுங்க பார்க்கலாம்
பாஜக இந்தியா முழுவதும் இருக்கக் கூடிய இயக்கம். அதில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள், எத்தனை மாநிலங்களில் எங்கள் கட்சி ஆட்சியில் இருக்கிறது என்பதைப் பார்க்கவேண்டும். மக்கள் எங்கள் பக்கம் வர ஆரம்பித்துவிட்டார்கள். பட்டியலின சகோதர, சகோதிரிகள் பாஜக பக்கம் முழுமையாக வந்துவிட்டார்கள். தடா பெரியசாமி, வி.பி.துரைசாமி போன்றவர்கள் பாஜகவில் மிகப்பெரிய தலைவர்களாக இருக்கிறார்கள். பாஜக போல் உங்கள் கட்சியில் சமூகநீதி அடிப்படையில் பதவி கொடுத்திருக்கிறோம் என்று ஒருவரைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

திருமா அண்ணனுக்கு
திருமாவளவன் அண்ணாவுக்கு துணை முதல்வராக வேண்டும் என்று கொஞ்சம் ஆசை. அதனால் ஸ்டாலின் அவர்களிடம், 'கூட்டணியைவிட்டு போய்விடுவேன்' என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்படி போவதாக இருந்தால் அண்ணா நீங்க தயவுசெய்து வாங்க. நானே மாலையைப் போட்டு வெளியே வாங்கனு கூப்பிடுகிறேன். அதற்காக பாஜகவை திட்டிவிட்டு ஒரு காரணத்தை கண்டுபிடிப்பதாக ஏன் டிராமா போடுகிறீர்கள். நானும் ஒரு மாதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எங்களை எதுக்கு பகடைக்காய் ஆக்குறீங்க
திருமாவளவன் அண்ணா கூட்டணியைவிட்டு வெளியே வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். ஆனால், அவர் போகிற கூட்டணியில் இவர்கள் எல்லாம் இருக்கக் கூடாதாம். யார் இருக்கக் கூடாது, ஆப்பிள், ஆரஞ்ச், மாதுளை ஆகிய பழங்கள் இல்லை என்றால் தான் வருவாராம். உங்களுக்குத்தான் இருக்க மரியாதை இல்லை. பிளாஸ்டிக் சேரில் உட்கார வைக்கிறார்கள். திருமாவளவனை சமூகநீதிக்கு எதிராக திமுகவினர் நடத்துகிறார்கள் என்றால், திருமாவளவன் வெளியே வர வேண்டாமா? பாஜகவை திட்டிவிட்டு ஒரு பில்டப் கொடுத்துவிட்டு, அதை வைத்து வெளியே வருவதற்கு எங்களை ஏன் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறீர்கள்?" என கடுமையாகச் சாடியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications