தபால் மூலம் முதலமைச்சருக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து... பாஜகவினருக்கு அறிவுறுத்திய அண்ணாமலை..!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து அஞ்சல் அட்டை அனுப்பி வைக்குமாறு பாஜகவினருக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
மாற்று மத பண்டிகைகளுக்கு மனமாற வாழ்த்துச் சொல்லும் முதலமைச்சர் தீபாவளி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வதில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கடுமையாக அண்ணாமலை எதிர்த்து வருகிறார்.

விநாயகர் சதுர்த்தி
வரும் வெள்ளிக்கிழமை அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ள நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்துள்ளது தமிழக அரசு. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த முடிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்த்து வருவதோடு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அனுமதி தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

ஒரு லட்சம் சிலைகள்
இதற்காக போராட்டங்கள் எல்லாம் கூட ஆங்காங்கு பாஜகவினர் நடத்தினர். இந்நிலையில் ஒரு லட்சம் வீடுகளின் வாசலில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தவுள்ளதாக கூறியுள்ள அண்ணாமலை, விநாயகரை பழித்தவர்கள் விநாயகரால் தண்டிக்கப்படுவார்கள் எனவும் கூறியிருக்கிறார். இதை புரிந்துகொள்ளவில்லை என்றால் விநாயகர் புரியவைப்பார் எனவும் தெரிவித்திருக்கிறார்.

விமர்சனம்
கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் எல்லாம் விநாகயர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கவில்லை என சுட்டிகாட்டியுள்ள அண்ணாமலை தமிழகத்தில் மட்டும் தடை விதிக்க என்ன காரணம் என வினவியுள்ளார். தமிழர்களை தொடர்ந்து அவமானப்படுத்துவதோடு தனிமனித உரிமைகளில் முதலமைச்சர் ஸ்டாலின் தலையிடுவதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மாற்றுமதம்
மாற்றுமத பண்டிகைகளுக்கு மட்டும் முதலமைச்சர் மனமாற வாழ்த்து தெரிவிப்பதாகவும் இதனால் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்து தமிழக பாஜகவினர் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கொரோனா மூன்றாம் அலை பரவலை சுட்டிக்காட்டி மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசே அறிவுறுத்தியுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை வைத்து அண்ணாமலை அரசியல் செய்வதாக திமுகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெரியார்
இதனிடையே பெரியார் பிறந்ததினமான செப்டம்பர் 17-ம் தேதியை சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில், பெரியாருக்கு முன்பாக சமூகநீதியை காக்க போராடிய வ.உ.சி., பாரதியார், போன்றவர்களை இருட்டடிப்பு செய்யக்கூடாது என அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications