டெல்லிக்கு தவறான "ரிப்போர்ட்டை" அனுப்பிய அண்ணாமலை.. உண்மையை உணர்ந்த அமித் ஷா? போட்டுடைத்த "புள்ளி"
சென்னை: தமிழ்நாட்டில் பாஜகவின் உண்மையான பலத்தை அமித் ஷா உணர்ந்து கொண்டார், ஆனால் அண்ணாமலையால் இதை உணர்ந்து கொள்ள முடியவில்லை., இத்தனை நாட்கள் அண்ணாமலை டெல்லி தலைமையிடம் தவறான ரிப்போர்டை, தகவலை கொடுத்தார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம்.
அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம். நாங்கள் தொலைதூர கிராமங்களில் இருக்கும் வாக்குசாவடிகளை கூட அடைந்து இருக்கிறோம். எங்கெல்லாம் பாஜக வலிமை இல்லாமல் இருந்ததோ அங்கெல்லாம் நாங்கள் சென்று சேர்ந்து இருக்கிறோம்.

அமித் ஷா
தமிழ்நாட்டில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவும். நாங்கள் வலிமை இன்றி இருக்கும் இடங்களில் எங்களுக்கு கூட்டணி கட்சிகள் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக அதிமுக கூட்டணிக்கு எதிராக பேசியதாக கூறப்பட்ட நிலையில்தான் தற்போது அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறிய நிலையில்தான் அமித் ஷா இப்படி பேசி இருக்கிறார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு - டெல்லிக்கு இடையிலான உறவு குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், அந்த கிளி தமிழ்நாட்டில் பறக்குமா பறக்காதா என்று கேட்கிறீர்கள்.. கிளி இங்கே பறக்குமா? அல்லது வேறு மாநிலத்தில் சென்று தஞ்சம் அடையுமா என்பது உங்கள் கேள்வி.. பொதுவாக பாஜக கூட்டணியை தேசிய தலைமைதான் எடுக்க வேண்டும். மாநில தலைவர் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியாது. இப்படிப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறினார். உள்ளரங்க கூட்டத்தில் அவர் பேசி இருந்தாலும், இதை நான் சொல்லவில்லை என்று அவர் மறுக்கவில்லை. அதோடு பாஜக என்ற கிளி கூட்டை விட்டு வெளியேறி பறக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அண்ணாமலை கூறினார்.

என்ன சொன்னார்?
தேசிய தலைமை எடுக்கும் எல்லா முடிவிற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அண்ணாமலை கூறினார். இந்த பேச்சை அமித் ஷா எப்படி ஏற்றுக்கொண்டார். டெல்லியில் அவர் என்ன செய்தார்? டெல்லியில் அவர் எப்படி அமித் ஷாவிடம் பேசினார் என்பது சந்தேகமாக உள்ளது. பாஜக வளர்ந்துவிட்டது என்று அண்ணாமலை கூறி வந்த நிலையில் தமிழ்நாட்டில் பாஜக வலிமையாக இல்லை என்று அமித் ஷா நேற்று கூறிவிட்டார். தமிழ்நாட்டில் பாஜகவின் உண்மையான பலத்தை அமித் ஷா உணர்ந்து கொண்டார். ஆனால் அண்ணாமலையால் இதை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

உண்மையான பலம்
தமிழ்நாட்டின் உண்மையான பலத்தை பாஜக தலைவர் அண்ணாமலையால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. மாவட்ட நிர்வாகிகள் கொடுக்கும் ரிப்போர்ட்டை வைத்து கூட அண்ணாமலையால் சரியாக பேச முடியவில்லை. இத்தனை நாட்கள் அண்ணாமலை டெல்லி தலைமையிடம் தவறான ரிப்போர்டை, தகவலை கொடுத்தார் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நிச்சயம் அப்படித்தான் செய்து இருக்கிறார். வளராத கட்சியை வளர்ந்த கட்சி என்று அவர் பேசிக்கொண்டு இருக்கிறார். அண்ணாமலையின் தலைமை பதவி ஊசலாட்டமாக இருக்கிறது. இவரின் செயல்பாடு குறித்த அதிருப்தி, கேள்வி தேசிய தலைமைக்கு வந்து இருக்கும்.

அதிருப்தி செயல்பாடு
அவரின் செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தி வந்து இருக்கும். பாஜக வளர்ந்து இருக்கிறது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பூத் கமிட்டி கூட இன்னும் முழுமையாக அண்ணாமலை போடவில்லை. முடிந்தால் அண்ணாமலை பூத் கமிட்டி லிஸ்டை வெளியிடட்டும். அண்ணாமலையால் முடியாது. அண்ணாமலையால் பாஜக வளர்ந்து இருக்கிறது என்பதை உறுதியாக சொல்ல முடியாதது. பாஜகவில் இணைந்த மாற்று கட்சியினர்... குக செல்வம் உட்பட எல்லா நிர்வாகிகளும் மீண்டும் தங்களின் சொந்த கட்சிக்கே திரும்பி விட்டனர். கட்சி வளர்கிறது என்றால் இவர்கள் ஏன் திரும்பி வர வேண்டும்.. சொல்லுங்கள்.. என்று பத்திரிகையாளர் குபேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications