அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்!
சென்னை: தமிழக அரசியலில் கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக பேசப்படும் பெயராக அண்ணாமலை உருவெடுத்துள்ளார். பாஜகவில் இருந்து விலகி, தனது புதிய அரசியல் இயக்கமான 'வி தி லீடர்ஸ்' அமைப்பின் மூலம் 'இது நம்ம இயக்கத்தை' தொடங்கியுள்ள அண்ணாமலை, தற்போது ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு நேரடி சவால் விடுக்கும் வகையில் அடுத்த கட்ட நகர்வை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து ஆயிரக்கணக்கான இளைஞர்களை அரசியலுக்குள் கொண்டு வருவதற்கான திட்டத்தை அவர் முன்னெடுத்து வருகிறாராம்.
கடந்த ஜூன் 5-ம் தேதி தனது புதிய அரசியல் பயணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அண்ணாமலை, அரசியலில் புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று கூறியிருந்தார். அதற்காக கோவையில் நவீன அரசியல் பயிற்சி மையம் தொடங்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்த பயிற்சி மையத்தில் அரசியல், நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் செயல்பாடு, மக்கள் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி பெறும் இளைஞர்களே எதிர்காலத்தில் தேர்தல் களத்தில் நிறுத்தப்படுவார்கள் என்றும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
அண்ணாமலை
இதன் மூலம் பாரம்பரிய அரசியல் குடும்பங்கள் மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களை மட்டும் நம்பாமல், சாதாரண இளைஞர்களையும் நேரடியாக தேர்தல் அரசியலுக்குள் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது. அண்ணாமலை வெளியிட்டுள்ள தகவலின்படி, 'வீ தி லீடர்ஸ்' இயக்கம் தொடங்கப்பட்ட வெறும் ஐந்து நாட்களிலேயே சுமார் 17 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இதில் கணிசமாக இளைஞர்கள் இணைந்துள்ளனர்.
ஜென் இசட் வாக்காளர்கள்
குறிப்பாக, உறுப்பினர்களில் 25.2 சதவீதம் பேர் 'ஜென்-ஸீ' தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் என அண்ணாமலை கூறியுள்ளார். அதாவது, 1997-க்கு பிறகு பிறந்த இளம் வாக்காளர்களே இந்த இயக்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக 60 ஆயிரத்து 370 பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் விஜய்
இதில் 37.7 சதவீதம் பேர் இளைஞர்கள். எண்ணிக்கையாக பார்க்கும்போது, சுமார் 22 ஆயிரத்து 760 பேர் தேர்தல் களத்தில் நிற்கத் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் இளைஞர்களை மையப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றவர் தற்போதைய முதலமைச்சர் விஜய். கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம், இளம் வாக்காளர்களின் ஆதரவை பெருமளவில் பெற்றதாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிட்டனர்.
இளைஞர் வேட்பாளர்கள்
அதே மாதிரியான உத்தியை தற்போது அண்ணாமலையும் கையில் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சமூக ஊடகங்கள், நேரடி உறுப்பினர் சேர்க்கை, அரசியல் பயிற்சி முகாம்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அணுகுமுறை ஆகியவை விஜயின் தேர்தல் வியூகத்தை நினைவுபடுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்போது ஆயிரக்கணக்கான வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், நகராட்சி மற்றும் மாநகராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும். இந்த நிலையில், 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் வேட்பாளர்களை ஒரே நேரத்தில் களமிறக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பது மிகப்பெரிய அரசியல் முயற்சியாக கருதப்படுகிறது. பொதுவாக உள்ளாட்சித் தேர்தல்களில் பெரிய கட்சிகள் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் அல்லது உள்ளூர் செல்வாக்கு கொண்டவர்களையே வேட்பாளர்களாக தேர்வு செய்கின்றன.
தமிழக அரசியல்
ஆனால், அரசியல் அனுபவம் இல்லாத புதிய தலைமுறையினரை நேரடியாக தேர்தல் களத்தில் நிறுத்தும் முயற்சி வெற்றி பெற்றால், அது தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்த முயற்சி உடனடியாக ஆட்சியை மாற்றும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்தாலும், இளைஞர்களை பெருமளவில் அரசியலுக்குள் இழுக்கும் அவரது திட்டம் திமுக, அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட முக்கிய கட்சிகளிடையே சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications