கெடு ஓவர்! நாளை களத்தில் குதிக்கும் அண்ணாமலை.. பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராக கோட்டையை நோக்கி பேரணி
சென்னை: தமிழ்நாட்டில் திமுக அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது. நாளை காலை அண்ணாமலை தலைமையில் தலைமை செயலகத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தப்பட உள்ளது.
கடந்த மே 21ம் தேதி நாடு முழுக்க பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது.
இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 50 காசும் குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 45 நாட்களுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. இந்த நிலையில் மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்தார்.

நிர்மலா கோரிக்கை
முக்கியமாக கடந்த நவம்பரில் நாங்கள் வரியை குறைத்த போது, வரியை குறைக்காத மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மத்திய அரசு எரிபொருள் வரியை குறைத்த 72 மணி நேரத்திற்குள் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார்.

போராட்டம் அண்ணாமலை
தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதி படி பெட்ரோல், டீசல் விலையை 5 ரூபாய் குறைக்க வேண்டும். இல்லையேல் கோட்டையை முற்றுகையிட்டு பாஜக போராட்டத்தில் ஈடுபடும். நீங்கள் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்ற சொல்கிறோம். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும் மத்திய அரசு வரியை குறைத்துள்ளது. ஆனால் தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்யாமல் திமுக ஏமாற்றி வருகிறது. திமுக மாநில வரியை குறைக்கவில்லை கோட்டையை நோக்கி பேரணி நடத்துவோம் என்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கெடு விதித்தார்.

அண்ணாமலை எச்சரிக்கை
ஆனால் தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். அதில், தமிழ்நாடு அரசு ஏற்கனவே வரியை குறைத்துவிட்டது. நாங்கள் ஆகஸ்ட் மாதமே குறைத்துவிட்டோம். 2014 -2022 வரை பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 23 ரூ, டீசல் விலையில் லிட்டருக்கு 29 ரூபாய் வரியை ஒன்றிய அரசுதான் உயர்த்தி உள்ளது. தற்போது அதில் 50 சதவிகிதத்தை குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்க சொல்கிறார்கள். இதுதான் உங்கள் கூட்டாச்சியா? என்று பிடிஆர் கேள்வி எழுப்பினர்.
Recommended Video

போராட்டம் நாளை
தமிழ்நாட்டில் மாநில அரசின் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க முடியாது என்று பிடிஆர் உறுதியாக அறிவித்துவிட்டார். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மாநில அரசு பெட்ரோல் - டீசல் விலையை குறைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பாக போராட்டம் நடத்தப்பட உள்ளது. தலைமை செயலகத்தை நோக்கி பாஜக சார்பாக நாளை காலை 10 மணிக்கு அண்ணாமலை தலைமையில் பேரணி நடத்தப்பட உள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications