விஜய் தான் டார்கெட்.. முதல் மாநாட்டிலேயே இறங்கி அடிக்க ரெடியாகும் அண்ணாமலை! பொள்ளாச்சி வியூகம்
சென்னை: வி த லீடர்ஸ் இயக்கத்தை ஆரம்பித்துள்ள அண்ணாமலை தனது முதல் மாநாட்டை பொள்ளாச்சியில் வரும் 12 ஆம் தேதி நடத்துகிறார். இந்த மாநாட்டில் அண்ணாமலை என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே எழுந்துள்ளது. இந்நிலையில் தனது முதல் மாநாட்டிலேயே முதல்வர் விஜய்யை அட்டாக் செய்து பேச அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் முடிந்த கையோடு பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். அண்ணாமலையின் வி தி லீடர்ஸ் இயக்கத்தில் ஆன்லைன் மூலமாக சேருபவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது.

விஜய்யை அட்டாக் செய்ய திட்டம்
50 லட்சம் உறுப்பினர்கள் எண்ணிக்கை சேர்ந்தால் கட்சி தொடங்குவது பற்றி பரிசீலிக்க இருப்பதாகவும் கூறி வந்த அண்ணாமலை வரும் 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் தனது அமைப்பின் முதல் மாநாட்டை தொடங்க உள்ளார். இதற்கான பந்தல் கால் நட்டப்பட்டு ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. தனியாக இயக்கம் தொடங்கி அண்ணாமலை நடத்தும் முதல் மாநாடு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அரசியல் ரீதியாக பேசுவாரா? இல்லை.. தனது இயக்கத்தின் அடுத்த கட்ட நகர்வு.. அரசியல் பாதை எப்படி நகரும் என்பது பற்றி பேசப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு அண்ணாமலை ஆதரவாளர்கள் மத்தியில் நிலவுகிறது. இதற்கிடையே, அண்ணாமலை தனது முதல் மாநாட்டிலேயே முதல்வர் விஜய்யை அட்டாக் செய்து திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர்
இளைஞர்களை குறிவைத்தே அரசியல் செய்ய அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகும், தவெகவை எதிர்க்கும் இளைஞர்களை தன் பக்கம் இழுக்கவும் அண்ணாமலை திட்டமிட்டு இருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் வட்டாரத்தில் பேசப்படும் தகவலாக இருக்கிறது. அண்ணாமலையை பொறுத்தவரை அதிரடியாக பேசக்கூடியவர். பாஜக தலைவராக இருந்த போது, கடுமையான திமுக எதிர்ப்பை முன்னிறுத்தி பாஜகவின் வாக்குவங்கியை உயர்த்தினார். இதே பாணியை பின்பற்றி தற்போது ஆளும் தவெகவை விளாசி, விஜய் எதிர்ப்பு வாக்குகளை தன்பக்கமாக இழுக்கும் திட்டத்திலேயே அண்ணாமலை காய் நகர்த்தக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது.
அண்ணாமலையை பொறுத்தவரை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். ஐபிஎஸ் படித்தவர் என்ற பிம்பம், ஊழல் குற்றச்சாட்டு எதுவும் இல்லாதது என்பதை வைத்து கிளீன் இமேஜ் ஆக தன்னை முன்னிறுத்தி ஆளும் அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதே அண்ணாமலையின் வியூகமாக இருக்கும் என்பது அரசியல் விமர்சகர்கள் கருத்தாக உள்ளது. அண்ணாமலையின் வருகை விஜய்யின் வாக்கு வங்கியில் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியிலும் சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதே அரசியல் விமர்சகர்கள் பார்வையாக உள்ளது.
அடுத்து திருச்செந்தூரில் மாநாடு நடத்த திட்டம்
பொள்ளாச்சி ஆச்சிபட்டி கொங்குசிட்டி மைதானத்தில் அண்ணாமலையின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை ஆதரவாளர் வசந்தராஜன் கூறுகையில், 'போதை இல்லா பொள்ளாச்சி' என்னும் பெயரில், முதல் மாநாடு நடத்தப்படும் என்றும், 25 ஏக்கரில் மாநாட்டு திடல் அமைக்கும் பணி நடைபெறுகிறது என்றும் கூறினார்.
ஜூலை 12 ஆம் தேதி பொள்ளாச்சியில் மாநாடு நடத்தும் அண்ணாமலை, ஜூலை 26-ம் தேதி திருச்செந்தூரிலும் இன்னொரு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார். அடுத்தடுத்து மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள அண்ணாமலை, கட்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறார்.














Click it and Unblock the Notifications