"இது வெட்கக்கேடுங்க".. அன்னபூர்ணா ஓனர் மன்னிப்பு விஷயத்தில் நிர்மலா சீதாராமனை விளாசிய ஸ்டாலின்
சென்னை: ஜிஎஸ்டி பற்றி பேசிய அன்னபூர்ணா உணவகத்தின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கோரினார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் அதுபற்றி முதல் முறையாக முதல்வர் ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்தார். அமெரிக்கா பயணத்தை முடித்து சென்னை வந்த அவர் நிர்மலா சீதாராமன் பெயரை சொல்லாமல் முதல் ரியாக்சனை பதிவு செய்துள்ளார்.
கோவை கொடிசியாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தொழில் அதிபர்கள் கடந்த 11ம் தேதி கலந்துரையாடினர். இதில் அன்னபூர்ணா உணவக குழும உரிமையாளரும், நிர்வாக இயக்குநருமான சீனிவாசன் பங்கேற்றார்.

அவர் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருக்கும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டி பேசினார். அவரது இந்த பேச்சு என்பது இணையதளங்களில் வேகமாக பரவியது.
சீனிவாசன் பேசும்போது, ‛‛உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ (மறைமுகமாக வானதி சீனிவாசன்) எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி.. உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி வைத்துள்ளனர். குறைத்தால் எல்லாவற்றிக்கும் குறையுங்கள். தயவு செய்து அதை கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். கணினியே திணறுகிறது. ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள்'' என கூறினார்.
இந்த வீடியோ இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. அதன்பிறகு நேற்று முன்தினம் மாலையில் இன்னொரு வீடியோ வெளியானது. நிர்மலா சீதாராமன் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுடன் அமர்ந்து இருக்க அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசன் அவர்களை சந்தித்தார். அதன்பிறகு நிர்மலா சீதாராமனிடம் அவர், ‛‛நான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்" என எழுந்து கைக்கூப்பி மன்னிப்பு கோரியிருந்தார்.
இந்த வீடியோ வெளியானது. இது சர்ச்சையானது. ஜிஎஸ்டியில் உள்ள குறையை கூறிய சீனிவாசனை பாஜகவினர் மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியிட்டு அவமானப்படுத்தி உள்ளதாக காங்கிரஸ், திமுகவினர் குற்றம்சாட்டினர். ராகுல் காந்தி முதல் கனிமொழி எம்பி வரை இந்த சம்பவத்தை விமர்சனம் செய்தனர். இதையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியதோடு, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்தார்.
இந்நிலையில் தான் அமெரிக்கா சுற்றுப்பயணத்தை முடித்து தமிழகம் வந்த முதல்வர் ஸ்டாலினிடம் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் மன்னிப்பு கோரிய விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்ட்டது. அதாவது கோவையில் 2 நாளுக்கு முன்பு ஜிஎஸ்டி தொடர்பாக நடந்த விவாதத்தில் பேசிய அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‛‛ஜிஎஸ்டி குறித்து தொழில் முனைவோர் சார்பில் நியாயமான கோரிக்கையை அவர் முன்வைத்தார். அதனை ஒன்றிய அமைச்சர் கையாண்ட விதத்தை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்'' என்று கூறிவிட்டு சென்றார். வேறு எதையும் முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்கவில்லை. அதாவது நிர்மலா சீதாராமன் பெயரை கூறாமல் அவரது செயல்பாட்டை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர் என்று மட்டுமே கூறிவிட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications