அன்னபூர்ணா ஸ்ரீனிவாசன் தமிழ்நாடு உணவு ஆணைய உறுப்பினராக நியமனம்! நிர்மலா சீதாராமனுடன் வாதம் செய்தாரே?
சென்னை: தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் உறுப்பினராக கோவை அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பன்னுக்கு வரி, கிரீமுக்கு தனி வரி என ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையின் சிக்கல்களைச் சுட்டிக் காட்டிய கோவை அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன் அண்மையில் நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் உறுப்பினர்களாக கே.எம். மதுபாலா, எம். கணேசன், கே. கருணாநிதி, எஸ். பெரியாண்டவர் ஆகியோர் உள்ளனர். கோவையை சேர்ந்த பிரபல உணவகமான ஸ்ரீ அன்னபூர்ணா உணவக குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. ஸ்ரீனிவாசனும் இந்த ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு என்ன நடந்தது?
கடந்த ஆண்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுடன் கோவையில் உள்ள தொழில்துறையினரைச் சந்தித்து உரையாடினார்.
அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி வரியில் உள்ள சட்ட சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.
" பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம், ஜாமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது. இன்புட் அதிகாரிகளும் திணறுகிறார்கள். ஒன்று ஒரே மாதிர ஜிஎஸ்டி வைங்க. வரியை ஏற்றிவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் இப்படி குழப்பம் வேண்டாம் எனப் பேசினார். பின்னர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் கவலைப்படுவதில்லை எனத் தெரிவித்தார்.
வெடித்துக் கிளம்பிய எதிர்ப்பு
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. "நான் எந்தக் கட்சியிலும் இல்லை, தயவுசெய்து என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். பொதுவாகத்தான் கேள்வியை முன்வைத்தேன். அது சர்ச்சையாகும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று கூறி இருந்தார். இது தொடர்பான வீடியோவும் வைரல் ஆனது.
அதன் பின்னர், வானதி சீனிவாசன் முன்னிலையில் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வரவே, அன்னபூர்ணா சீனிவாசன் முன்வந்து சங்கடத்தை ஏற்படுத்தியதாக மன்னிப்பு கேட்டார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார். எனினும், கோவை அன்னபூர்ணா தொழிலதிபருக்கு அவமரியாதை ஏற்பட்டிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அந்த வீடியோவை பகிர்ந்ததற்காக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கோரினார். வீடியோ வெளியாக காரணமாக இருந்தவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக அப்போது அன்னபூர்ணா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் எம்எஸ்எம்இ மற்றும் வர்த்தக சபை பிரதிநிதிகளின் கூட்டத்தில் எங்கள் நிர்வாக இயக்குநர் டி.சீனிவாசன் கலந்துகொண்டு, உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் விதிக்கப்படும் மாறுப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்பாக குரல் எழுப்பினார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, மறுநாள் தனது சொந்த விருப்பத்தின் பேரில் தனிப்பட்ட முறையில் நிதியமைச்சரை நேரில் சந்தித்து, தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார்.
இந்த தனிப்பட்ட சந்திப்பு தொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது தவறான புரிதலையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தேவையற்ற அனுமானங்கள், தவறான அரசியல் புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துவிட்டு வழக்கமான பணியை தொடர விரும்புகிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications